இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து இந்த பகுதில் உள்ள தேயிலை மலைகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன், அங்குள்ள பாடசாலைகளிலும் சிறுத்தைகள் உலாவி வருவதாக அங்கிருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அங்குள்ள மக்கள் தேயிலை மலைக்கு சென்று கொழுந்து பறிக்க முடியாதுள்ளதுடன், பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கையை சரிவர முன்னெடுக்க முடியாதுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்..
குடியிருப்பு பகுதிகளில் உலாவும் சிறுத்தைகள், கால்நடைகள் மற்றும் அங்கு காவலில் ஈடுபடும் நாய்களை வேட்டையாடி வருகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்ச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
முன்னதாக, சிறுத்தைகளின் நடமாட்டம் தொடர்பில் அங்குள்ள பாடசாலை அதிபர் காவல் நிலையம் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளிடத்திலும் முறைப்பாடு செய்துள்ள போதும் அதிகாரிகளால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று விசனம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் பாடசாலை வளாகத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்தமையால் சுமார் ஒரு வாரகாலமாக பாடசாலை மூடப்பட்டது. இந்த நிலையில் பெற்றோர்களால் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டதை அடுத்து வனவிலங்கு அதிகாரிகள் சிறுத்தைகளை விரட்டுவதற்கு வெடிகளை போட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன் மக்களிடமும் சில வெடிகளை கையளித்துள்ளனர். அங்கு அச்சத்தில் வாழும் மக்கள், குறித்த தேயிலை மலை காடாக மாறிவருவதனாலேயே அங்கு சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எது எவ்வாறு இருப்பினும் பொது மக்கள் மற்றும் மாணவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றே. ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.