மளிகை கடை வழக்கம் போல் காலை 6 மணிக்கு திறக்க வேண்டியது, நேற்று காலை 7. 30 மணியாகியும் திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அப்பகுதியினர் அவர்களின் வீட்டுக்கதவைத் தட்டியுள்ளனர்.
ஆனால், நீண்டநேரமாகியும் வீடு திறக்காததால், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது, குடும்பத்தில் உள்ள 7 பெண்கள், 4 ஆண்கள் உள்ளிட்ட 11 பேரும் வீட்டின் உள்ளே காற்றோட்டமான வெட்டவெளியின் இரும்பு உத்தரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்திருந்தனர்.
அவர்களின் கண்கள், கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், வாய் ஒட்டப்பட்டும் இருந்தது. வீட்டிலும் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான எந்த கடிதமும் இல்லை.
தொடர்ந்து 11 பேரின் சடலங்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, சாந்த் நகர் போலீஸ் இணை கமிஷனர் கூறியதாவது:முதல்கட்டமாக இந்த சம்பவத்தை தற்கொலை என்றே சந்தேகிக்கிறோம்.
ஆனாலும் விசாரணை நடத்தி வருகிறோம், உடற்கூறு அறிக்கை கிடைத்தபின், அடுத்த கட்டமாக விசாரணை தொடங்கும். இறந்தவர்களில், நாராயண் தேவி (77), அவரது மகன்கள் புவனேஷ் (50), லலித் (45), மருமகள்கள் சவிதா (48), தீனா (42), நாராயண் தேவியின் மகள் பிரதீபா (57), பேரன், பேத்திகள் பிரியங்கா (33), நீத்து (25), மோனு (23), துருவ் (15), சிவம் (15) என தெரியவருகிறது.
தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்து, இப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
போலீசாரின் கூற்றுபடி, கடந்த சில நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதில், மூன்று பேர் மட்டுமே கட்டாய தற்கொலைக்கு முடிவெடுத்தனர்.
ஆனால், குடும்பத்தில் எல்லோரும் சாவதாக இறுதி முடிவு எடுத்துள்ளனர். சம்பவ நாளன்று அனைவரும் தூக்க மாத்திரை கலந்த உணவை உட்கொண்டுள்ளனர். அதன்பின், தற்கொலை செய்து கொண்டனர்.
கட்டாய தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த மூவரும் தற்கொலை கடிதம் எழுதிவைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆனால், கடிதம் எழுதவில்லை. இவ்வழக்கு குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. வீட்டின் அருகில் வசிப்பவர்கள் கூற்றுபடி, ஆன்மீகம் அல்லது கடவுளின் மாயையை அறிய முற்படுவது தொடர்பான பொன்மொழிகளை வீட்டின் முகப்பில் கையால் எழுதி வைத்துள்ளனர். வீட்டில் எவ்வித சூறையாடலோ, நகை, பணம் கொள்ளையோ இல்லைபெண்கள் அணிந்திருந்த நகைகள் அப்படியே இருக்கின்றன.
ஆன்மீக மாயையின்படி, தற்கொலை செய்து கொண்டு சுவர்க்கம் செல்வதற்கான குறிப்புகள் உள்ளன.
இறந்தவர்களின் கைகள், கால்கள், வாய் ஆகியன கட்டப்பட்டிருப்பது, அதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே, தற்கொலை குறித்து அண்டை வீட்டாரிடம் குடும்ப உறுப்பினர்கள் சிலர் பேசியுள்ளனர்.
நாராயண தேவியின் கழுத்து மட்டும் நெரித்து கொல்லப்பட்டிருப்பதால், கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர், தற்கொலை செய்து கொண்டவர்களின் இடத்தில் இருந்து சில அடி தூரத்தில் உள்ள அறையில் கிடந்தார்.
மற்றவர்களின் இறப்பு குறித்து பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே தெரியவரும்.
குடும்பத்தில் கடன் பிரச்னை, குடும்ப சண்டை ஏதும் இல்லை என்று கடையில் பணியாற்றும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.