தென்னாப்பிரிக்காவில் எப்போதும் இல்லாத அளவு தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. கேப்டவுன் உள்ளிட்ட இடங்களில் மிக அதிகமாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சத்தைப் போக்க அண்டார்டிக்காவில் இருந்து பனிப்பாறையை கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்தலாம் என கடல் நீர் ஆய்வாளர் நிக் ஸ்லோன் (Nick Sloane) தெரிவித்துள்ளார்.
தண்ணீர் உற்பத்திக்கான வேறு ஆதாரங்கள் இல்லாததால் கேப்டவுன் மக்கள் தவித்து வருகின்றனர். இதனையடுத்து, ஆயிரத்து 900 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அண்டார்டிகாவில் இருந்து 100 மில்லியன் டன் எடை கொண்ட பனிப்பாறையை இழுத்து வந்து குடிநீர் பிரச்னையைத் தீர்க்கலாம் என்றும் நிக் கூறியுள்ளார். இதற்கு 72 மில்லியன் பவுண்டுகள் செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பல்வேறு மக்களுக்கு தண்ணீர் தேவை பூர்த்தி ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.