சூடானில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது என்று, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
சூடானில் ரொட்டி உற்பத்திக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரசாங்க மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை சடுதியாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும் , சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் என பலரும் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அங்குள்ள வீதிகளை மறித்து, கடைகளை கொள்ளையிட்டு பொருட்களை எடுத்துச் செல்வதும் அதிகரித்து இருப்பதாக குறித்த ஊடங்கங்கள் குறிப்பிட்டுள்ளன. போராட்டக்காரர்களை தடுக்க கலவர தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் பொலீசாருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மாதம் முதல் இந்த மாதம் வரை ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. அதேசமயம் அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் பேரணி நடைபெற்றது. இதன் காரணமாகவும் பதற்றம் நீடிக்கிறது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறையில் கடந்த 21-ம் திகதி வரை 24 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன