எதிர்த்து போட்டிக்கு நிற்க யாருமே இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக படவெளியீட்டை நடத்தி வசூலை வாரி குவித்துக்கொண்டிருந்த 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த்துடன் இப்போது முட்டிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர் அடுத்த நிலை நடிகர்கள்.
வருடத்திற்கு ஒன்று, இரண்டு வருடங்களுக்கு ஒன்று என நீண்ட இடைவெளி எடுத்து படங்களில் நடித்துக்கொண்டிருந்த ரஜினிகாந்த் தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்துக்கொண்டிருக்கின்றார். ஒரு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய முன்னரே அவரது அடுத்த படத்திற்கான அறிவிப்பும் வெளியாகிவிடுகின்றது. அந்த அளவுக்கு தொடர்ச்சியாக படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கின்றார் 'சூப்பர்ஸ்டார்'.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில், மிகப்பெரும் தொகை பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வெளிவந்த "2.௦" திரைப்படம் வெள்ளித்திரை கண்டு 3 மாதங்கள் கூட நிறைவடைந்திராத நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான "பேட்ட" திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. அடுத்த 'சூப்பர்ஸ்டார்' தல அஜித் நடிப்பில் வெளிவந்த "விஸ்வாசம்" படத்துடன் போட்டியிட்ட "பேட்ட" திரைப்படத்தால் 'தல' அஜித்தை முந்திச்செல்ல முடியவில்லை. வசூலிலும் "விஸ்வாசம்" எகிறிக்கொண்டது.
இந்த நிலையில், ரஜினியின் புதிய படத்திற்கான முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் இந்தப் படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்துவிட்டு, அடுத்த மாதம் படப்பிடிப்பை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். அத்துடன், இந்தப் படத்திற்கான திரைக்கதையை முழுமைப்படுத்தும் பணியில் வெகு மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார் என்கின்றது படக்குழு.
இது இப்படியிருக்க, உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் 'சூப்பர்ஸ்டார்' ரஜினியை தன் கமரா கண்களால் மெருகூட்டி திரைக்குக் கொண்டுவர 27 வருடங்களின் பின்னர் கூட்டிணைந்திருக்கின்றார் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் 'பத்மஸ்ரீ' சந்தோஷ் சிவன். ரஜினியின் புதிய படத்தில் இணைந்து பணியாற்றப்போவது பற்றி சந்தோஷ் சிவன் தனது டுவிட்டர் சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிடுகையில், "தளபதி" திரைப்படத்திற்குப் பின்னர் மீண்டும் ரஜினியுடன் புதிய படத்தில் இணைவது மகிழ்ச்சி என்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார்.
இதேவேளை, அடுத்தடுத்து புதிய படங்கள் பற்றிய அறிவிப்புக்களும் செய்திகளும் தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டிருக்க, எந்தவித இடைவெளியும் இல்லாமல் நடித்துக்கொண்டிருக்கும் 'சூப்பர்ஸ்டார்' ரஜினியின் இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் புரியாமல் ரசிகர்களும், கோடம்பாக்கமும் குழம்பிப்போயிருந்தாலும், ரஜினியின் புதிய படங்களை தொடர்ச்சியாகக் கொண்டாட வாய்ப்புக் கிடைத்திருக்கின்றதே என்ற சந்தோசத்தில் திளைத்திருக்கின்றார்கள் ரஜினி ரசிகர்கள்.
இருந்தும், தமிழ் திரையுலகைப் பொறுத்தவரைக்கும் யாருக்குமே இல்லாத மிகப்பெரும் ரசிகர் வட்டத்தைக் கொண்டவரும், கிட்ட நெருங்க முடியாத வசூல் மன்னனுமான 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் அண்மையில் 'தல' அஜித்தின் "விஸ்வாசம்" படத்தின் 'சூப்பர்ஹிட்' மூலம் வசூலில் பின்தங்கிப்போனமையும், தனக்கு அடுத்த தலைமுறை நட்சத்திரங்களுடன் ரஜினிகாந்த் போட்டி போட ஆரம்பித்துள்ளமையும் 'சூப்பர்ஸ்டார்' ரசிகர்களின் மனதில் கவலையை ஏற்படுத்தத் தவறவும் இல்லை என்பதே உண்மை.