தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்க நடிகர் 'சீயான்' விக்ரம் எவ்வளவு போராட்டங்களை கடந்து வந்தாரோ, அதேபோன்று மகன் துருவ் விக்ரமிற்கும் முதல் திரைப்படமே ஆட்டம் கண்டிருக்கின்றது.
இயக்குனர் பாலா "சேது" எனும் ஒரு தேசிய விருது பெற்ற 'சூப்பர்ஹிட்' திரைப்படத்தை எடுத்து, எப்படி விக்ரமின் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டுவந்து திரையுலகில் அவரை நிலை பெற வைத்தாரோ, அதே போன்று தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற "அர்ஜுன் ரெட்டி" எனும் திரைப்படத்தை விக்ரமின் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி தமிழில் "வர்மா" என்ற பெயரில் படத்தை உருவாக்கியிருந்தார் பாலா.
தனது இயக்கத்தில் விக்ரமை எப்படி ரசிகர்களிடம் கொண்டு சென்று சேர்த்தாரோ அதேபோன்று தனயன் துருவ் விக்ரமையும் தானே திரையுலகுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் "வர்மா" படத்தை உருவாக்கியதுடன், அந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராக இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த நிலையில் பிரச்சனையில் சிக்கிக்கொண்டு விக்ரம் குடும்பத்திற்கு கவலையை கொடுத்துள்ளது.
இயக்குனர் பாலா மற்றும் "வர்மா" திரைப்படத்தின் தயாரிப்புத் தரப்புக்கு இடையில், படத்தின் கதை மற்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள விதம் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, வெளியீட்டுக்கு ஏற்ற வகையில் முழுமை பெற்ற படம் திரைக்கு வராமல் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இருந்தும், துருவ் விக்ரமை கதாநாயகனாகக் கொண்டு "அர்ஜுன் ரெட்டி" எனும் அதே தெலுங்குப் படத்தை கதை மாற்றம் செய்யாமல் "வர்மா" என்ற பெயரில் படப்பிடிப்பு நடத்தி, எதிர்வரும் ஆனி மாதத்தில் படத்தை வெளியிடப்போவதாக தயாரிப்புத் தரப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தெலுங்குப் படமான "அர்ஜுன் ரெட்டி" திரைக்கதையை தமிழில் "வர்மா" என்ற பெயரில் அப்படியே படமாக்காமல் இயக்குனர் பாலா திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்ததாகவும், அதை தயாரிப்பு நிறுவனம் ஏற்காததால் முழு படத்தையும் தயாரிப்பு நிறுவனம் கைவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால், தற்போது மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள "வர்மா" படத்தை இயக்கித்தரும்படி பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனிடம் தயாரிப்புத் தரப்பு கேட்டுள்ளதாகவும், அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் கோடம்பாக்கம் சொல்கின்றது.
அத்துடன், இயக்குனர் பாலா உருவாக்கியிருந்த "வர்மா" திரைப்படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மேகா சௌத்ரி நடித்திருந்தார். ஆனால், தற்போது புதிதாகப் படமாகவிருக்கும் "வர்மா" திரைப்படத்தில் மேகா சௌத்ரிக்குப் பதிலாக, மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி கபூரை கதாநாயகியாக்கும் முயற்சியிலும் படக்குழு ஈடுபட்டுள்ளதாக கிசுகிசுக்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
சிக்கலில் சிக்கிக்கொண்ட "வர்மா" படம் பற்றி பலவாறான செய்திகள் இப்படி வெளியாகிக்கொண்டிருப்பதால் திரையுலகிலும் ரசிகர்கள் மத்திலும் துருவ் விக்ரம் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கின்றார். இது இப்படியிருக்க, இந்தப் பிரச்சனை தொடர்பில் இயக்குனர் பாலாவிடமிருந்து வெளியாகியுள்ள அறிக்கையில், “படைப்புச் சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகுவது நான் மட்டுமே எடுத்த முடிவு. துருவ் விக்ரமின் சினிமாவிற்கான எதிர்காலம் கருதி இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை” என்று தெரிவித்துள்ளார்.