நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் மகனும், நடிகர் சிம்புவின் சகோதரருமான, குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார்.
குறளரசன் இன்று மதம் மாறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் மதம் மாறும் போது எடுக்கப்பட்ட காணொளிப் பதிவொன்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
நடிகர் சிலம்பரசன், தீவிர சிவ பக்தன் ஆவார். ராஜேந்தர் இந்து மதத்தின் மீது, அதீத நம்பிக்கையுள்ளவர். அதேநேரம், மகள் இலக்கியா கிறிஸ்தவ மதத்தை தழுவியுள்ளார். இந்த வரிசையில் குறளரசன், தற்போது இஸ்லாம் மதத்தை தழுவினார்.
குறளரசன் இஸ்லாம் மதத்தை மத அனுட்டாங்களுடன் ஏற்றுக்கொண்ட போது, ராஜேந்தர் மற்றும் அவரது தாயார் உஷா ஆகியோர் உடன் இருந்தார்கள்.
மகனது மத மாற்றம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ராஜேந்தர், குறளரசனுக்கு சிறு வயதிலிருந்தே இஸ்லாம் மார்க்கத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தார். தற்போது, இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அண்ணா சாலையிலுள்ள மக்கா மசூதி ஜமாத்தார் முன்னிலையில் குறள் இஸ்லாத்துக்கு மாறினார். அவர் விருப்பத்துக்கேற்ப பெயர் ஒன்றை வைத்துக்கொள்ள ஜமாத்தில் கூறியுள்ளனர் என்றவர் நானும் அனைத்து மதத்துக்கும் பொதுவானவன். நான் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி கோயில், முருகன் கோயில் என அனைத்து ஸ்தலத்துக்கும் சென்று வருகின்றவன். அதே நேரம் எனது தஞ்சை சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் எம்ப்ளம் அனைத்து மதத்தின் குறியீடுகளையும் கொண்டுதான் வடிவமைத்தேன் என்றார்.
இதனிடையே, இசையமைப்பாளர், இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவும் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்தை தழுவிய ஒரு பிரபலமாகும். இதேபோல ராஜேந்தர் குடும்பத்திலும், ஒரு மினி இந்தியாவையே பார்க்க முடியும் என்ற அளவில் மும்மதங்களின் சங்கமம் நிகழ்ந்துள்ளது.
இதே போன்று அழகி, சிலந்தி, சண்டைக்கோழி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை மோனிகா, மதுரையை சேர்ந்த தொழிலதிபரை மணந்து கொண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.
தமிழக திரையுலகை பொறுத்தளவில், எந்த மதமாக இருந்தாலும் சம்மதம் என்ற இணக்கமான சூழ்நிலை நிலவுகின்ற நிலையில் குறளரசனும் இப்போது இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார் என்று பல பிரபலங்களும் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள்.