Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
04
இனிக்க இனிக்க பாட்டுக் கொடுத்த பாலு ; பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு

SooriyanFM Gossip - இனிக்க இனிக்க பாட்டுக் கொடுத்த பாலு ; பிறந்தநாள் சிறப்புத் தொகுப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

929 Views
இசை எனும் ஊடகம் மூலமாய் வந்து, நாளெல்லாம் இனித்து இனித்து, கேட்காத தெவிட்டாத பாடல்களைக் கொடுத்து, எங்களோடு என்றும் ஜீவிக்கின்ற ஒருவர் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள்.
நிலாவைப் பிடிக்காதவர் இந்த நிலத்தில் எவரும் இல்லை. அதேபோல் பாலுவின் பாடலைப் பிடிக்காதவர்களும் இந்த லோகத்தில் இருக்க முடியாது. மொழி, இனம், மதம், பேதம் எல்லாவற்றையும் கடந்து பாலுவின் கானம் ரசிக்கப்படுகிறது.

இப்படி பெருமைகளை தன்னகத்தே சேர்த்த இந்த இனிய நிலாவுக்கு இன்று எழுபத்தியிரண்டு வயதாகிறது; இந்த நாள் எங்கள் கொண்டாட்டங்களின் உச்சம் தொடும் நாளென்று சொல்லி விட்டு கடக்க முடியாது. நிச்சயம் ஆடிப்பாடி கொண்டாடிய தீரவேண்டும். என் பேனா மை தீருமளவுக்கு எழுதித் தீர்க்க ஆசை. ஆகையால், இந்த சின்னப் பதிவு. 

பாலு ஒரு தேசிய ஒற்றுமையின் சின்னம். ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் பாடிய பெருமை பாலுவுக்கு உண்டு. இந்த நிலையை அடைய அவர் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும்? எவ்வளவு தோல்விகளைச் சந்தித்திருக்க வேண்டும்? இதெல்லாம் நாம் கேட்கும் எஸ். பி. பி. என்ற குரலின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ரீங்காரங்கள்.

ஏழு ஸ்வரங்களில் எவ்வளவு பாடல்களை வேண்டுமானாலும் ஒலிக்க வைக்க முடியும். ஆனால் ஏழு ஜென்மங்கள் எடுத்தாலும் பாலுவின் குரல் இனிமைக்கு ஈடாக ஒரு குரல் இருக்குமா என்று ரசிகர்கள் வியக்கும் வண்ணம், திக்கெட்டும் பாலுவின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

எஸ். பி. பி. என்ற பெயரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கத் தேவையில்லை. ஆனால் எஸ். பி. பி. என்கிற மனிதரின் வாழ்க்கைப் போராட்டங்கள் உங்களுக்குத் தெரியாது. இதுவரை பாலுவின் குரல் மட்டுமே உங்கள் காதில் ஒலித்து வந்தது. இதோ பாலுவின் மனக்குரல் ஒலிக்கத் தொடங்குகிறது. எங்கே ஆரம்பிக்கலாம்?

முதலில் பாலு எப்படி பாட வந்தார்? முதலில் இரண்டு நிகழ்ச்சிகளைக் கேட்டுவிட்டு பாலுவின் பால்ய பருவத்திற்குச் செல்வோமா?

மெல்லிசைப் பாடல் போட்டி ஒன்றில் பாட எஸ். பி. பி. அறியாமலே, அவருடைய நண்பர் ஒருவர் விளையாட்டாகப் பெயர் கொடுக்க எஸ். பி. பி. அந்தப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாகப் பாடினார். ஆனால் பரிசு கிடைக்கவில்லை. எனினும் ஒரு சுவையான அறிமுகம் கிடைத்தது. கோதண்டபாணி என்ற ஓர் இசையமைப்பாளர் அந்தப் போட்டியின் போது இருந்தார்.

இளைஞர் எஸ். பி. பி.யிடம் ‘உனக்கு நல்ல குரல்வளம் இருக்கிறது. உன்னை சினிமாவில் பாட சேர்த்து விடுகிறேன்’ என்று உற்சாகமூட்டி, பாலுவைப் பல சினிமா இசையமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்றார். எப்படி முதல் பாட்டுப் போட்டியில் எஸ். பி. பி.க்கு பரிசு கிடைக்கவில்லையோ, அதே போல் முதல் சினிமா முயற்சியும் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை. எஸ். பி. பி யும் சரி, அவரை அழைத்துச் சென்ற கோதண்டபாணியும் சரி, மனம் தளரவில்லை.

அவர்களின் முயற்சி வெற்றியடைய பல நாட்கள் ஆயின. ஆனால் பல நாட்கள் காத்திருந்து, பலமான அஸ்திவாரத்தோடு எழுப்பப்பட்ட இசை மாளிகைதான் எஸ். பி. பி. யின் பாடல்கள். தனக்கு முதன் முதலில் வாய்ப்பிற்காக அழைத்துச் சென்ற இசையமைப்பாளரை இன்றளவும் எஸ். பி. பி. மறக்கவில்லை. பாட ஆரம்பித்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ரிக்கார்டிங் தியேட்டருக்கு ‘கோதண்டபாணி ஓடியோ ரிக்கார்டிங் தியேட்டர்’ என்று குருவின் பெயரையே சூட்டி தன் நன்றிக் கடனைச் செலுத்தினார். எஸ். பி. பி. யின் குரல் மட்டும் வித்தியாசமானதன்று.

அவரின் மனமும் மற்ற கலைஞர்களிடமிருந்து மாறுபட்டது என்பதை உணர வைக்கும் சம்பவம் தான் இது.

முதல் போட்டியில் பரிசு கிடைக்காதது பெரிய தோல்வி என்றால், அதைவிடச் சுவையான நிகழ்ச்சியையும் பாலு சந்தித்திருக்கிறார். ஒரு தெலுங்கு சங்கத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பரிசு வாங்கிக் கொண்டிருந்தார் எஸ். பி. பி.. மூன்றாவது ஆண்டும் வெற்றி பெற்றால், பாலுவிற்கு ஒரு பெரிய வெள்ளிக் கோப்பை ஒன்று பரிசாகக் கிடைக்கும். இந்நிலையில் மூன்றாவது ஆண்டுப் போட்டியில் சங்கத்தின் பொறுப்பாளர்களில் சிலர் எஸ். பி. பி. ஐ இரண்டாவது பரிசுக்குத் தள்ளி விட்டார்கள்.

நீதிபதிகளின் முடிவை பாலு மனமார ஏற்றார். போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு ஒரு பிரபலமான பின்னணிப் பாடகி தலைமை தாங்கினார். பாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களைப் பாட மேடைக்கு அழைக்க, முதல் பரிசு பெற்ற இளைஞர் போட்டியில் பாடிய அதே பாடலைப் பாடிச் செல்ல, இரண்டாவது பரிசு பெற்ற எஸ். பி. பி. தன் பாடலைப் பாடி முடித்தார்.

பரிசளிக்க வந்த பாடகியின் முகத்தில் ஏகக் கோபம். அவரே மைக் முன்னால் வந்து ‘இன்று இரண்டாவது பரிசு வாங்கியிருக்கும் இளைஞன், முதல் பரிசு வாங்கியிருக்கும் இளைஞனை விட மிக நன்றாகப் பாடியுள்ளான். ஆகையால் போட்டியின் முடிவுகளை ஏற்க என் மனம் சம்மதிக்கவில்லை’ என்று கூறி எஸ். பி. பி. க்கு முதல் பரிசையும் அந்த வெள்ளிக் கோப்பையையும் வாங்கித் தந்தார்.

திரையுலகத்தின் ஒரு பிரபலமான பாடகியால், சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அங்கீகாரம் பெற்றவர் எஸ். பி. பி.. பிற்காலத்தில் அன்று பரிசளித்த பாடகியுடனேயே பல பாடல்களைப் பாடியிருக்கின்றார் எஸ். பி. பி.. இன்றும் அந்தப் பாடகியின் மீது மட்டற்ற மரியாதை வைத்திருக்கிறார். சண்டை போட்டு எஸ். பி. பி.க்கு பரிசு வாங்கிக் கொடுத்த அந்தப் பாடகி யார் தெரியுமா?

பாலுவின் திறைமைக்காகப் போராடி முதல் பரிசை வாங்கித் தந்த அந்தப் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி தான். அன்றிலிருந்து இன்றுவரை சகோதரி திருமதி எஸ். ஜானகியை பெரிதும் மதித்து வருகிறார் பாலு.

உழைப்பு உயர்வைக் கொடுக்கும். நல்ல நேரம் இருந்தால் உழைப்புக்கேற்ற பலனாக பெயரும் புகழும் பணமும் கிடைக்கும். உண்மையான திறமையிருந்தால்தான் உயர்ந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். இது எல்லாமே பாலுவின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.

தமிழில் பாட வருவதற்குள் சில தெலுங்குப் படங்களுக்காகப் பாடியிருக்கிறார். தமிழில் முதலில் பாடிய பாடல் ‘இயற்கையென்னும் இளைய கன்னி’ என்ற டூயட். இது ‘சாந்தி நிலையம்’ படத்திற்காக மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடியது.

ஆனால் பாலுவை தமிழ்ப் பட உலக ரசிகர்களிடையே பிரபலமாக்கிய பாட்டு ஒன்று உண்டு. அந்தப் பாடல் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எல்லாரையும் கவர்ந்த பாடல். ஒரே பாடலால் தமிழகம் முழுவதும் தெரிந்த பின்னணி பாடகர் எஸ். பி. பி. ஒருவராகத்தான் இருக்க முடியும். அவருக்கு புகழை வாங்கித் தந்த பாடல் ‘ஆயிரம் நிலவே வா’ என்று ‘அடிமைப் பெண்’ணில் ஒலித்த பாடல்தான்.

‘ஆயிரம் நிலவே வா’ பாடலை எஸ். பி. பி. பாடக் காரணமாயிருந்தவர் மக்கள் திலகம் தான். பாலு அந்தப் பாடலைப் பாட வேண்டிய நாளில், நல்ல ஜுரத்தில் படுத்திருந்தார் என்பதை முன்பே சொல்லியிருந்தார். பாலு இல்லாமல் கார் திரும்பி வந்ததும், விஷயத்தைப் புரிந்துகொண்ட மக்கள் திலகம், ரிக்கார்டிங்கைக் கான்சல் செய்துவிட்டார். இந்த விவரம் பாலுவிற்குத் தெரியாது. தனக்கு பதிலாக வேறு யாரோ ஒருவர் அந்தப் பாட்டைப் பாடியிருப்பார் என்று தான் நினைத்திருந்தார்.

இரண்டு மாதத்திற்குப் பிறகு, மீண்டும் எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் கார் பாலுவை அழைக்க வந்தபோது, பாலுவிற்கு அதை நம்பவே முடியவில்லை. தன்னைப் போல பிரபலமாகாத ஒரு பாடகனுக்காக எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் போன்ற ஒரு ஸ்தாபனம் இரண்டு மாதங்கள் காத்திருப்பார்கள் என்பதை பாலுவால் நம்ப முடியவில்லை.

பாடலைப் பாடிய பிறகு மக்கள் திலகத்தைச் சந்தித்து நன்றி சொன்னார். அப்பொழுது மக்கள் திலகம் பாலுவிடம் ‘தம்பி என் படத்திலே பாட்டுப் பாடப் போaங்கன்னு நீங்க எல்லார்கிட்டேயும் சொல்லியிருப்பீங்க, உங்க நண்பர்கள் இந்தப் படத்தில் உங்க பாடலை ஆவலோடு எதிர்பார்த்திருப்பாங்க, உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரைப் பாடவைத்து உங்களையும், உங்கள் நண்பர்களையும் ஏமாற்ற நான் விரும்பல. அதனால்தான் உங்களுக்காக இந்தப் பாட்டு காத்திருந்தது’ என்று கூறி வழியனுப்பினார்.

இப்படியிப்படி ஏராளம் புகழ் பெற்று, போராட்டங்களையும் சாதனையாக்கி சிகரம் தொட்ட பாடும்நிலவுக்கு இன்று பிறந்தநாள் ; சூரியக் குடும்பமும், எம் நேயர்களுக்கு சேர்ந்து வாழ்த்துக்களை நாள்முழுதும் அள்ளித் தெளிப்பது மட்டுமில்லாமல், அவர் பாடல்களை நாளெல்லாம் இங்கே ஒலிக்க விட்டு மகிழ்ந்துகொள்கிறோம். 

ஐயா!!
நம் ஜீவன் இங்கு ஜீவிக்கும் வரை என்றும் என்றென்றும் உங்கள் இசைக்கு உயிருண்டு ; அது எங்கையும் சேர்த்து நீள வாழ வைக்கும். 

- இராமசாமி ரமேஷ்-
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top