செயற்கை முறையில் குழந்தைகளைப் பிரசவிக்கும் பெண்களுக்கு, மார்ப்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 55,000 தாய்மார்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 11,500 பேர் உயிரிழப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 266,000 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 40 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.
இதனிடையே செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைப் பெறும் பெண்களுக்கும், மார்பகப் புற்றுநோய் வருவதற்கு 10% கூடுதல் வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
டென்மார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஐவிஎப் எனப்படும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை எடுக்கும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, கடந்த 21 ஆண்டுகளாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
இதில் கருத்தரிப்புக்கான அதிக வீரியமிக்க மருந்துக்களை எடுத்துக் கொள்வதால், தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய் தாக்கும் ஆபத்து கூடுதலாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதில், ஐவிஎப் சிசிச்சைப் பெற்ற 58,534 பெண்களுடன், அதே வயதுடைய கருத்தரித்தல் மையங்களுக்குச் செல்லாத 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஒப்பிடப்பட்டனர். இதில், செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை பெற்ற ஒவ்வொரு ஆயிரம் பெண்களிலும் 8 பேருக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்து 10 சதவீதம் அதிகமாக இருந்தது.
இதேபோல், கருத்தரித்தல் சிகிச்சை பெறாதவர்களோடு ஒப்பிடுகையில் ஒவ்வொரு ஆயிரம் பெண்களிலும் 6 பேருக்கு மாத்திரமே மார்பக புற்றுநோய் ஆபத்து இருப்பது தெரியவந்துள்ளது. கருத்தரித்தல் சிகிச்சை மூலம் முதல் குழந்தை பெற்ற 40 வயதுடைய பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு 65% கூடுதல் வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வயதானவர்களுக்கு சில நேரங்களில் கூடுதல் வீரியம் மிக்க மருந்துகள் மற்றும் கருப்பையை தூண்டுவதற்காக அதிக அளவு மருந்துகள் தேவைப்படுவதாலும், அவற்றை உட்கொள்வதால் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.