"புலி"யிலும் பாடும் விஜய் -ஜெயிக்குமா ஜில்லா பாடல் கூட்டணி......???
இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கிறது "புலி" திரைப்படம். தளபதி ரசிகர்களை மட்டுமல்லாது திரையுலகினரிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தப் படம். ஏனெனில், முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகிய பல படங்கள் வணிக ரீதியாக அவ்வளவு வெற்றியடையவில்லை என்பதும் கூட இந்த எதிர்பார்ப்பிற்கு காரணம் எனலாம்.
இளையதளபதி ரசிகர்களைப் பொறுத்தவரை, விஜய் வேறுபட்ட தோற்றங்களில் நடிக்க வேண்டும், விதவிதமான கெட் - அப்களில் அவரை திரையில் ரசிக்க வேண்டும் என்பதில் அவ்வளவு எதிர்பார்ப்பு அற்றவர்கள் என்றே சொல்லலாம். அதேவேளை, விஜய்யின் நடனம், சண்டைக்காட்சி போன்றவற்றையே அதிகம் ஆர்வம் கொண்டவர்கள். அத்தோடு, விஜய் தன்னுடைய குரலில் ஒரு பாடல் தன்னும் பாடவேண்டும் என்பதையும் எதிர்பார்ப்பவர்களாகவே உள்ளார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக, மற்றைய நடிகர்களையும் விட தன்னுடைய படங்களில் ரொம்பவே கவனமெடுக்கிறார் விஜய்.
இந்தநிலையில், தன்னுடைய குரலில் ஒரு பாடலை பாடி அந்தப் பாடலையும் சூப்பர்ஹிட் ஆக்குவதில் விஜய்க்கு நிகர் அவரேதான் என்றே சொல்லலாம். தனது ஆரம்பகாலப் படங்களில் சில பாடல்களைப் பாடியதோடு "சச்சின்" படத்துக்குப்பிறகு சிறிது காலம் பாடாமலிருந்த விஜய், மீண்டும் ‘துப்பாக்கி’ படத்தின் ‘கூகுள் கூகுள்...’ பாடல் மூலம் தனக்குள்ளிலிருந்த பாடகரை வெளிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து ‘தலைவா’வில் ‘வாங்கண்ணா... வணக்கங்கண்ணா...’, ‘ஜில்லா’வில் ‘கண்டாங்கி... கண்டாங்கி...’, ‘கத்தியில் ‘செல்ஃபி புள்ள...’ என வரிசை விஜய் பாடிய அனைத்துப் பாடல்களும் சூப்பர்ஹிட் ஆகியிருந்தன. அந்த வரிசையில் புலி படப்பாடல் ஒன்றும் இணையப் போகின்றது என்கிறார்கள் இளையதளபதி ரசிகர்கள்.
இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில், தான் நடித்துவரும் ‘புலி’ என்ற இந்தப் படத்திலும் தன்னுடைய அழகான குரலில் சூப்பரான பாடல் ஒன்றைப் பாடி முடித்திருக்கிறாராம் விஜய். கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியிருக்கிறது இந்தப் பாடல்.
ஏற்கெனவே விஜய் பாடிய ‘கண்டாங்கி... கண்டாங்கி’ பாடல் செம ஹிட் ஆகியிருந்தது. அந்தப் பாடலை எழுதியவரும் வைரமுத்துதான். அதனால் வெளிவரவிருக்கும் இந்தப் பாடலும் சூப்பர்ஹிட் ஆகும் என்று அடித்துக் கூறுகிறார்கள் விஜய்யின் தீவிர ரசிகர்கள்.
*S. G. R