நடிகர் சிம்பு நீண்ட நாட்களின் பின்னர் நடித்து வெளியாகவிருக்கும் "ஈஸ்வரன்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் நடந்த ஒரு சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது குறித்து படத்தின் இயக்குனர் சுசீந்திரன் விளக்கமளித்துள்ளார்.
இசை வெளியீட்டு மேடையில் "ஈஸ்வரன்" திரைப்படத்தின் நாயகி நிதி அகர்வால் படம் குறித்து பேசிக் கொண்டிருக்கையில், அருகில் சென்ற இயக்குனர் சுசீந்திரன், நடிகர் சிம்புவை நோக்கி 'மாமா ஐ லவ் யூ' என்று கூறுமாறு கோரி நடிகை நிதி அகர்வாலிடம் பல தடவை வற்புறுத்திக் கொண்டிருந்தார்.
இருந்தும், மேடையில் பேசி முடித்து திரும்பிய நடிகை நிதி அகர்வால், இயக்குனர் வற்புறுத்திக்கூறிய அந்த வார்த்தையை ஒரு தடவை கூட கூறியிருக்காத நிலையில், இந்த சம்பவம் பொது வெளியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
சமூகவலைத்தளங்களினூடாகவும் இயக்குனர் சுசீந்திரனுக்கு எதிராக பல கருத்துக்களும், கண்டனங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில், "ஈஸ்வரன்" படத்தின் இயக்குனர் சுசீந்திரன் தனது அருகில் நடிகை நிதி அகர்வாலையும் அமரவைத்து தனது தரப்பு விளக்கத்தை காணொளி ஒன்றினூடாக பொது வெளியில் முன்வைத்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிடுகையில், "இசை வெளியீட்டு விழாவில் நிதி அகர்வாலை நான் சர்ச்சைக்குரிய வகையில் பேச வைத்ததாக ஒருசிலர் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் சிம்புவை விரட்டி விரட்டி ஐ லவ் யூ என்று சொல்லி காதலிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் தான் நிதி அகர்வால் நடித்துள்ளார். இதை வைத்து தான் நான் இசை வெளியீட்டு விழாவில் அப்படி சொல்லச் சொன்னேன். நிறைய பேர் அதை தவறாக புரிந்து கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர்’ என கூறியுள்ளார்.
இதனை ஆமோதிக்கும் வகையில் நடிகை நிதி அகர்வால் தனது புன்னகை பூத்த முகத்துடன் தலையை அசைத்து இயக்குனர் சுசீந்திரனின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் காணொளி தற்போது வெளியாகியுள்ளது.