இந்தோனேஷியாவிலுள்ள தொல்பொருள் ஆய்வாளர்களால், சுமார் 45,500 ஆண்டுகள் பழமையான குகை ஓவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஓவியம் ஒரு பன்றியின் உருவமாகும். இந்த ஓவியம் குறித்து அவுஸ்திரிலேயாவிலுள்ள கிரிஷிப்ட் பல்கலைக்கழக பேராசிரியர் கருத்து வெளியிடும் போது, இந்தோனேஷியாவில் உள்ள சுலாவெசி தீவில் பழமையான பொருட்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அங்கு லைம்ஸ்டோன் வகை கற்கள் குறித்து, லிங்க்ஸ்டேட் என்ற குகைக்குள் ஆராய்ச்சி நடந்த போது, ஒரு பன்றியின் ஓவியத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
அந்த பன்றியின் ஓவியம் 136 சென்டி மீட்டர் நீளமும், 54 சென்டி மீட்டர் அகலமும் கொண்டது. ஒரு பன்றி, மற்ற பன்றிகளை நோக்கி வருவது போல இந்த பழங்கால ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.
அடர் சிவப்பு நிறத்தைக் கொண்டு இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. எதிரில் இருக்கும் மற்ற இரு பன்றிகளின் ஓவியங்களும் சேதமடைந்து காணப்படுகின்றன.
45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தோனேஷியாவில் வாழ்ந்த பழங்குடியின மக்கள் இந்த ஓவியத்தை வரைந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளதாக, தெரிவித்தார்.
இந்த ஓவியம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.