ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உறக்கம் கட்டாயமாக தேவை. எனினும் நம்மில் பலர், சரியான முறையில் உறங்குவதில்லை. அதிக வேலைப்பளு, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நிறைவான உறக்கம் இல்லாமலேயே போகின்றது.
இதனிடையே மதிய உணவு உண்ட பின்னர் உறங்குவது உடல் எடை அதிகரிப்பிற்கு காரணமாவதுடன், சில ஆரோக்கிய குறைப்பாடுகளை ஏற்படுத்தும் என, இதுவரை பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
எனினும் இந்த கருத்தை தகர்த்தெறியும் வகையில் புதிய ஆய்வொன்றின் முடிவு வெளியாகியுள்ளது. மதிய உணவிற்கு பின்னரான மிதமான தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளைத் தருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு உறங்கிய பின்னர் எழுந்ததும் உற்சாகமாக செயல்பட்டு எமது வேலையில் நேர்த்தியை காட்ட முடியும். அத்துடன் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, தீர்க்கமான முடிவுகளை எட்டும் அளவுக்கு மூளை உற்சாகமாக வேலை செய்யும் என்று, இங்கிலாந்தில் உள்ள ப்ரிஸ்டோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மதியம் ஒரு மணிக்கும் இரண்டு மணிக்கும் இடையில் இந்த தூக்கத்தை மேற்கொள்வது அதிக பயன்களைத் தரும். குறிப்பாக இரவில் விழித்து பணி செய்பவர்கள், இரவில் வாகனம் ஓட்டிச் செல்கிறவர்கள் இதை கடைப்பிடிப்பது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.