நடிகர் சிம்புவின் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்றையதினம் வெளியான "ஈஸ்வரன்" திரைப்படத்தை உருவாக்கிய இயக்குனர் சுசீந்திரனின் தாயார் உடல்நலக் குறைவினால் இன்று காலை காலமானார்.
இயக்குனர் சுசீந்திரனின் தாயாரான 62 வயதாகும் ஜெயலட்சுமிக்கு சுவாசிப்பதில் சிரமமேற்பட்டு திடீரென மாரடைப்பு உருவானதால் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அதிதீவிர சிகிச்சைகள் எவையும் பலனளிக்காத நிலையில்,இன்று காலை 11மணியளவில் இயக்குனர் சுசீந்திரனின் தாயார் காலமானதாக தென்னிந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
நேற்றையதினம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்போடு கலவையான விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் "ஈஸ்வரன்" திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மகிழ்ச்சியாக இருந்த படக்குழுவினரின் ஒட்டுமொத்த சந்தோஷமும் இந்தத் திடீர் மரணத்தினால் ஒருநொடியில் காணாமல் போய்விட்டதாக படக்குழு சார்ந்தவர்கள் குறிப்பிடுவதுடன்,தமது ஆழ்ந்த இரங்கலையும் துக்கத்தையும் இயக்குனர் சுசீந்திரனுடன் இணைந்து பங்கெடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.