சீனாவிலுள்ள மக்களுக்கு நச்சு ரசாயனம் கலக்கப்பட்ட பாதுகாப்பற்ற குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று ஆய்வுகளை மேற்கொண்டது. இதன்போது துணிகள் மற்றும் பூச்சி கொல்லிகள் ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்படும் நச்சு ரசாயனம் கலக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சீனாவில் உள்ள சுமார் 10 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக கிழக்கு சீனாவின் வூக்சி, ஹேங்ஜவ் மற்றும் சுஜவ் நகரங்களிலும், குவாங்டாங் மாகாணத்தின் போஷான் நகரங்களிலும் உள்ள மக்களுக்கே, இந்த குடிநீர் அதிகமாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரசாயன பொருட்கள் ஏனைய ரசாயன கலவைகளை விட அதிக ஆபத்து நிறைந்தவையாகும். இது பல்வேறு சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது. இவை மனித உடலிலோ அல்லது சுற்றுச் சூழலிலோ பெருமளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடியதாகும்.
இதனிடையே இந்த விடயம் குறித்த விசாரணைகளை அந்த நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முன்னெடுக்கவுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.