திருப்பூர் மாவட்டம் நொச்சிப்பாளையம் பகுதியில் கடந்த 17 ஆம் திகதி அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் சடலத்தின் அருகில் கிடந்த தொலைபேசி மற்றும் அடையாள அட்டையை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்தனர். இதனை அடித்து மரணித்தவர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 49 வயது ரவீந்திரதாஸ் என்று உறுதி செய்யப்பட்டது.
குறித்த நபர் அதே பகுதியில் வாடகைக்கு அறையெடுத்து தங்கி, திருப்பூரில் ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அவரது தொலைபேசியை ஆய்வு செய்ததில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த 20 வயதான சுபாஷ் என்பவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். சுபாஷ் அதே பகுதியில் உள்ள வேறொரு ஆடை நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
சுபாஷை கைது செய்து காவல்துறையினர் விசாரித்த போதுதான் ரவீந்திரதாஸ் ஏன் கொலை செய்யப்பட்டார்? என்பது தெரிய வந்தது. சுபாஷும் , ரவீந்திரதாஸூம் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.
நண்பர்களான இருவரும் தன்பால் ஈர்ப்பாளர்கள் என்பதால் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். காதலர்களாக இருவரும் அடிக்கடி ஊர் சுற்றி உல்லாசமாகவும் இருந்துள்ளனர். இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக ரவீந்திரதாஸூக்கு வேறொரு ஆண் நண்பருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் அடிக்கடி ரவீந்திரதாசுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 13 ஆம் திகதி இருவரும் நொச்சிப்பாளையம் அருகே உள்ள பகுதியில் சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் ஆண் நண்பர் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது தான் ஆத்திரத்தில் சுபாஷ், ரவீந்திரதாஸை தலையில் அடித்துக் கொலை செய்தமை விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, கோவை மத்திய சிறையில் தடுத்து வைத்தனர். தன்பால் ஈர்ப்பாளர்கள் மத்தியில் ஏற்பட்ட முரண்பாட்டால், கொலையில் முடிந்த சம்பவம் நொச்சிப்பாளையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.