இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் கலைக்கப்படும் வேளை (ACC இதுவரை மேற்கொண்டு வந்த ஆசியாவில் கிரிக்கெட் வளர்ச்சிக்கான சகல நடவடிக்கைகளையும் இனிமேல் சர்வதேச கிரிக்கெட் பேரவை பொறுப்பெடுக்கும்), ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரிலும் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்படுகிறது.
1984 முதல் கடந்த ஆண்டு வரை 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டியாக நடந்து வந்த ஆசியக் கிண்ணப் போட்டி, அடுத்த வருடம் T 20 போட்டித் தொடராக இடம்பெறவுள்ளதாக ஆசிய சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இறுதியாக நடந்த ஆசியக் கிண்ணத் தொடரில் சாம்பியனான இலங்கை அணியுடன், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் ஆகிய வழமையான அணிகளுடன் (கடந்த வருடம் ஆப்கானிஸ்தான் அணியும் விளையாடியது), சர்வதேச T 20 அந்தஸ்து பெற்றுள்ள ஏனைய ஆசிய அணிகளான ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு ராஜ்ஜியம், நேபாளம், ஹொங்கொங் ஆகிய நான்கில் ஏதாவது இரண்டாவது விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டில் இந்தியாவில் நடைபெறவுள்ள உலக T 20 கிண்ணத்துக்கான முன்னாயத்தமாகவே இந்தப் போட்டித் தொடர் T 20 வடிவில் நடத்தப்படவுள்ளது.
எனினும் 2018இல் மீண்டும் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடராக மாறும்.2019இல் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளுக்காக.
இப்படி இரு வருடங்களுக்கு ஒருமுறை ஒருநாள் மற்றும் T 20 போட்டியமைப்பாக மாறி மாறி நடக்கும்.
அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள இந்த ஆசிய ( T20) கிண்ணம் எந்த நாட்டில் இடம்பெறும் என்று இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
இறுதியாக நடந்த இரு ஆசியக் கிண்ணங்களும் (2012, 2014) பங்களாதேஷில் நடைபெற்றன.
1984இல் ஆரம்பித்த ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரில் நடப்பு சாம்பியனாக விளங்கும் இலங்கை அணி 5 தடவைகள் ஆசிய சம்பியனாகியுள்ளது.
இந்தியாவும் 5 தடவைகள் சம்பியனாகியுள்ள அதேவேளை, பாகிஸ்தான் 2 தடவைகள் சம்பியனாகியுள்ளது.
ஏஆர்வி