தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி, கலகலப்பு-2, மதுர வீரன், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட 6 படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், சித்திக் இயக்கத்தில் அரவிந்தசாமி - அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தையும் பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இவ்வாறாக பொங்கலுக்கு வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், வெளியாகும் படங்களுக்கு திரைகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி, கலகலப்பு-2, மதுர வீரன் உள்ளிட்ட படங்களுக்கு இன்னமும் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. தணிக்கை சான்றிதழ் விரைவில் கிடைக்கும் பட்சத்தில் எந்தெந்த படங்கள் பொங்கலுக்கு வெளியாகும்என்பது தெரியவரும்.
எனினும் இதில், தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் விரைவில் கிடைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே இந்த இரு படங்களும் வெளியாவது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரு படங்களுமே 60-70 சதவீத திரைகளை கைப்பற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே பொங்கல் போட்டியில் இருந்து சில படங்கள் பின்வாங்க வாய்ப்பிருப்பது உறுதியாகி இருக்கிறது.