காய்ச்சல் என்பது ஒருநாள் இரண்டு நாள் வந்துவிட்டு சென்றால் அது பற்றி கவலை கொள்ள தேவையில்லை. ஆனால், அதுவே உயிரை கொல்லும் எமனாக மாறினால்...? சமீப காலங்களில், உலகளவில் டெங்கு, சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல், எலிக்காய்ச்சல், மர்மக் காய்ச்சல் என்று பலவகை காய்ச்சல்கள், பலவகை பெயர்களில் மனிதர்களின் உயிர்களை பறித்து வருகின்றன. நாம் சாதாரணமாக கருதும் காய்ச்சல்கள் எவ்வாறு உயிரைக் கொல்லும் வீரியம் படைத்தவையாக மாறுகின்றன? அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை கழகத்தின் சுகாதார பாதுகாப்பு மையத்தின் தொற்றுநோய் மருத்துவர் அமெஷ் அடல்ஜா இது பற்றி தெரிவித்துள்ளார்
உலகளவில் ஆண்டுதோறும் 30 லட்சம் முதல் 50 லட்சம் பேர் காய்ச்சலால் அவதியுறுகின்றனர். இதில் 2,91,000 முதல் 6,46,000 பேர் வரை ஆண்டுதோறும் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டுக்காண்டு மாறுபடும் என்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளது.
கடந்த 1976 முதல் 2005 வரை காய்ச்சல் தொடர்பான பாதிப்பால் அமெரிக்காவில் 3,000 முதல் 49,000 வரை உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கும் இந்த மையம், கடந்த 2010 முதல் 2016 வரை ஆண்டுதோறும் காய்ச்சல் தொடர்பான பாதிப்பால் அமெரிக்காவில் 12,000 முதல் 56,000 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
நம்முடைய உடலுக்குள் கண், மூக்கு மற்றும் வாய் மூலமாக உட்புகும் வைரஸ் முதலில் நம்முடைய செல்களை முக்கியமாக மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள செல்களை அழிக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபடும். இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக நம்முடைய உடலில் இயல்பாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, தன்னுடைய படை வீரர்களான வெள்ளை ரத்த அணுக்கள் உள்ளிட்டவற்றை அனுப்பும்.
நம்முடைய மூச்சுக்குழாய், நுரையீரல் உள்ளிட்ட பகுதிகளை தாக்கி அங்கேயே இருக்கும் வைரஸ்களை இந்த படை வீரர்கள் தாக்கி அழிக்க முனையும். இந்த முறையில், நோய் எதிர்ப்பு அதிகமாக உள்ள இளைஞர்கள், காய்ச்சலை எதிர்கொண்டு, சில தினங்கள் அல்லது வாரங்களில் காய்ச்சலில் இருந்து மீண்டு வந்துவிடுவார்கள். ஆனால் சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடுதலாக வேலை செய்து விட்டால், ரத்தத்திற்கு தேவையான ஆக்சிஜனை வழங்க முடியாமல், உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது.
இது மட்டுமின்றி இரண்டாம் கட்ட தொற்றுநோய் பாதிப்பால் உடலுறுப்புகள் செயலிழந்து உயிரிழப்புகள் ஏற்படலாம். இத்தகைய பாதிப்புகளுக்கு வயதும் ஒரு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இந்த பாதிப்புகளால் அதிகமாக உயிரிழக்கின்றனர்.
குறிப்பாக குழந்தைகளும் 65 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களும் காய்ச்சல் பாதித்தால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியின் வேலைத்திறன் குறைவாகவே இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுக்கிறது. இவ்வாறு அடல்ஜா கூறியுள்ளார்.