விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அச்சன்குளம் கிராமத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 15 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் வேலை செய்துவந்தனர்.
நேற்று 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வந்திருந்தனர். இந்தநிலையில் மதியம் 1 மணி அளவில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் ஆலையில் உள்ள 60 அறைகளில் 15 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. மேலும் 13 அறைகள் பலத்த சேதம் அடைந்து தீப்பற்றி எரிந்தன.
அந்த அறைகளில் பணியாற்றிய பலர் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டும், உடல் கருகியும் பிணமாக கிடந்தனர். மேலும் பலர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
இந்த வெடிவிபத்து சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து ஊர்களை சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்தனர். அவர்களும், ஆலையில் மற்ற அறைகளில் பணியாற்றியவர்களும் மீட்பு பணியில் ஈடுபட தொடங்கினர்.
உயிருக்கு போராடியவர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு, சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பலியானவர்கள் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த சம்பவத்தில் 19 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக மொத்தம் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.