நகங்கள் எமது கைகளுக்கு மேலதிகமாக அழகு சேர்கின்றன. பெரும்பாலான பெண்கள் நீண்ட, வலுவான நகங்கள் தங்கள் கைகளை அலங்கரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
அப்படி நகங்கள் வளர்க்க ஆசைப்பட்டாலும் அது சாத்தியமாவதில்லை. ஆசை ஆசையாய் வளர்க்கும் நகங்கள் சில நாட்களிலோ, சில வாரங்களிலோ உடைந்து போகின்றன. எனினும் ஒருசில எளிமையான வழிமுறைகளை பின்பற்றினாலே நகங்களை அழகாக வளர்க்க முடியும்.
உடலில் நீர்ச்சத்தை தக்க வைப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் மட்டுமல்ல, நகங்களின் வளர்ச்சிக்கும் உதவும். இளநீர், பழ ஜூஸ்கள் உள்ளிட்ட திரவ உணவுகளை உட்கொள்ளலாம்.
உடலில் நீர்ச்சத்தை போதுமான அளவு தக்க வைக்க முடியாத சூழலில் நகங்களுக்கு ஈரப்பதன் தரும் கிரீம்களை உபயோகிக்கலாம்.
நகங்கள் எளிதில் உடையக் கூடிய வகையில் பலவீனமாக இருந்தால் புரதம் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டியிருக்கும். நீண்ட மற்றும் வலிமையான நகங்களை பெறுவதற்கு போதுமான அளவு புரதச்சத்துள்ள உணவை உட்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காலை உணவில் முட்டை மற்றும் பால் பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
நகங்களை வட்ட வடிவில் வளர்ப்பதே சிறப்பானது. மற்ற வடிவங்களுடன் ஒப்பிடுகையில் வட்ட வடிவ நகங்கள் தான் எளிதில் உடைந்து போகாது. மேலும் நகங்களை நீளமாக வளர்ப்பதற்கும் உதவியாக இருக்கும்.
ஒருவேளை உடையக்கூடிய நகங்களாக இருந்தால் அவற்றை அடிக்கடி வெட்டி ஒழுங்குபடுத்தி வரலாம். அப்படி வெட்டி ஒழுங்கமைப்பது நகங்கள் வலுவாக வளர்வதற்கு உதவும்.