கிறிஸ்துமஸ் தினம் என்றாலே எல்லோர்க்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான நாள் ஆகும். சிறியவர் முதல் பெரியோர் வரை பிரியாணி சேமியா என்றால் மிகவும் பிடித்த உணவாகும்.
அதிலும் சிக்கன் ( Chicken ) சேமியா என்றால் சொல்லவா வேண்டும். அதை எப்படி தயாரிப்பது என்று இந்த பதிவில் பார்ப்போம். இதற்கு தேவையானவை ..
*சேமியா - கால் கிலோ
*சிக்கன் - கால் கிலோ
*இஞ்சி பூண்டு - இரண்டு தேக்கரண்டி
*பட்டை - சிறிதளவு
*பெரியவெங்காயம் - ஒன்று
*தக்காளி - ஒன்று
*எலுமிச்சை சாறு - இரு தேக்கரண்டி
*தயிர் - சிறிதளவு
*பச்சை மிளகாய் - இரண்டு
*கொத்தமல்லி - சிறிதளவு
*புதினா - சிறிதளவு
*மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
*சீரக தூள் - சிறிதளவு
*கரம் மசாலா - அரை தேக்கரண்டி
*மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
*முந்திரி பருப்பு - இருபது கிராம்
*உப்பு , நெய் , எண்ணெய்,
மேற்சொன்ன அத்தனையும் போதும்.
தாளிப்பதற்கு தேவையானவை ..
*கிராம்பு
*இலவம்பட்டை
*ஏலக்காய்
*சோம்பு ஆகியனவாகும்.
முதலில் பாத்திரம் ஒன்றில் சேமியாவை போட்டு நன்கு வறுத்துக்கொள்ளவும். அதன் பிறகு தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, தழை ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். அதன்பின் சிக்கனை ( Chicken ) நன்றாக கழுவி எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பச்சைமிளகாயை நீளமான பாகமாக வெட்டி எடுத்து கொள்ளவும். அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து சூடேறியபின் நெய் மற்றும் எண்ணெயினை சமமான அளவில் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பிறகு முந்திரி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
அடுத்து நன்றாக வெங்காயம் வதங்கியதும் அதனுடன் இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை ஒரு முறை நன்றாக கரண்டியால் வதக்கி விடவும். அடுத்து அதில் தக்காளி, கொத்தமல்லி, புதினா எலுமிச்சை சாறு, தயிர் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கி விடவும்.
தக்காளி குழைகின்ற பதத்தில் நன்றாக வதங்கியதும் அதில் ஏற்கனவே சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை (Chicken ) போட்டு வதக்கவும் சிக்கன் ( Chicken ) முக்கால் பாகம் அளவிற்கு வெந்த பிறகு சிக்கனுடன் மிளகாய் தூள் சீராக தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் அரை லீட்டர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சேமியாவை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு தம் போடவும். அவ்வாறே இருக்க இருபது நிமிடங்களின் பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும். இப்போது அனைவருக்கும் பிடித்த சுவையான சிக்கன் சேமியா பிரியாணி ரெடி.