இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
பிரதமரின் பதவி பிரமாண நிகழ்வில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்ததுடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நான்காவது முறையாகவும் பிரதமராக பதவி ஏற்கிறார்.
121 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானியாவின் பிரதமராக இருந்த வில்லியம் எட்வர்ட் க்ளெட்சன் என்பாரே நான்கு முறைகள் பிரதமராக பதவி வகித்துள்ளார்.
1993 மற்றும் 2001 ஆண்டுகளில் அவர் பிரதமராக பதவி வகித்திருந்த அதேநேரம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலின் பின்னர், பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டிருந்தார்.
தற்போது மீண்டும் அவர் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
1949ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி பிறந்த ரணில் விக்ரமசிங்க, கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் பட்டம் பெற்று சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இலங்கையின் பல்கலைக்கழகத்தில் பட்டம் ஒன்று நாட்டின் பிரதமர் பதவியை வகிக்கும் ஒரேஒரு பிரதமரும் ரணில் விக்ரமசிங்கவே ஆவார்.
1977ம் ஆண்டு பியகம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு தெரிவான அவர், அதன் பின்னர் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.