சிவப்பு சந்தனம் சரும பராமரிப்பிற்கு உதவும் மிக சிறந்த ஒரு பொருளாகும். இது முகப்பருக்களை இல்லாது செய்யும் தன்மை கொண்டது. மேலும் சருமத்தில் வெயிலினால் ஏற்படக்கூடிய கருமையை நீக்கக்கூடிய குளிர்ச்சியான பொருளாகும்.
சரும பராமரிப்பிற்கு பல்வேறு வழிகளில் உதவும் இந்த சிவப்பு சந்தனத்திற்கு அழகு சாதன பொருட்களின் வரிசையில் எப்போதும் முன்னுரிமை உண்டு. குறிப்பாக நல்ல தரம்மிக்க சிவப்பு சந்தனம் அதிக மதிப்பு மிக்கது. வழக்கமாக பயன்படுத்தப்படும் சந்தனத்தை போலவே சிவப்பு சந்தனமும் தூளாக கிடைக்கிறது.
சிவப்பு சந்தனத்துடன் சில துளிகள் தூய்மையான தேங்காய் எண்ணெயை கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்கு பின் முகத்தை கழுவும் போது வறட்சியான சருமம் மென்மையடையும்.
இதுவே எண்ணெய் பசை மிக்க சருமமாக இருந்தால், சிவப்பு சந்தனத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து முகத்திற்கு பூசலாம். இந்த கலவை உலர்ந்த பின் முகத்தை கழுவினால் அதீத எண்ணெய் பசை தன்மையிலிருந்து விடுபட முடியும்.
நம்மில் பலர் முகத்தின் புற அழகில் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளாக பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் இருக்கின்றன. இந்த இரண்டையும் இல்லாது செய்வதற்கு சிவப்பு சந்தனத்துடன் சிறிது பன்னீரையும் சேர்த்து பூசி வர, கரும்புள்ளிகளின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வரும். மேலும் சிவப்பு சந்தனத்துடன் சிறிது தேன் மற்றும் மஞ்சளை கலந்து பூசி வர சருமத்திற்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.