நாம் அனைவரும் எப்போதும் அழகாகவும் நிறமாகவும் இருக்கவே விரும்புகிறோம். ஆனால் அனைவரும் அவ்வாறு இருப்பதில்லை. ஒவ்வொருவரும் வேறுபட்ட தோற்றத்தையும் நிறத்தையும் கொண்டிருக்கிறோம். எமது அழகையும் நிறத்தையும் அதிகரித்துக் கொள்வதற்காக கடைகளில் விற்பனையாகும் 'கிரீம்' வகைகளை அதிகமாக பயன்படுத்துகிறோம். இதனால் சிலநேரங்களில் சருமம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே எந்த விதமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாத, இயற்கைவழியில் அமைந்த அழகுக்குறிப்புகளைப் பின்பற்றுவது சிறந்ததாகும் . அந்தவகையில் உருளைக்கிழங்கு சிறந்த ஓர் பொருளாகும். உருளைக்கிழங்கைப் பயன்படுத்திச் செய்யக்கூடிய அழகுக்குறிப்பைப் பற்றி இங்கு பார்ப்போம்.
முதலில் ஓர் உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி, அதில் பாதி உருளைக்கிழங்கை மேலும் மூன்று துண்டுகளாக வெட்டி , அந்த ஒவ்வொரு துண்டினையும் முகத்தில் வைத்து மசாஜ் செய்யவேண்டும். இவ்வாறு செய்துவர முகத்தில் காணப்படக்கூடிய கரும்புள்ளிகள், கருவளையம் போன்றவவை மறைந்து முகம் பொலிவு பெறும் .
அதேபோல உருளைக்கிழங்கினை சீவி , அதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூளும் , காய்ச்சாத பசுப்பாலும் சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்களின் பின்னர் முகத்தை சுத்தமான நீரினால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் மூன்று தடவை செய்துவர முகம் பளபளப்பாக மாறி வருவதை காணலாம் .
உருளைக்கிழங்கின் சாற்றையும், தக்காளிப்பழத்தின் சாற்றையும் ஒன்றாகக் கலந்து குளிப்பதற்கு அரைமணிநேரத்திற்கு முன்னர், சருமத்தில் பூசி நன்கு காய வைக்க வேண்டும். இந்த பேஸ்ட் நன்கு காய்ந்ததும் குளிக்கலாம். இதனால் சருமத்தில் காணப்படும் அழுக்குகள் நீங்கி, மென்மையான சருமம் கிடைக்கின்றது.