நாம் ஒவ்வொருவரும் அழகாக இருக்கவே விரும்புகின்றோம். அதற்காக பல்வேறு விதமான அழகுக்குறிப்புக்களைப் பின்பற்றிவருகின்றோம். அந்தவகையில் அழகை மேம்படுத்துவதில் பன்னீருக்கு முக்கிய இடம் உண்டு. சமையல் தேவைகள் முதல் சருமப் பராமரிப்பு வரை முக்கியத்துவம் பெற்றிருக்கும் பன்னீர் தரும் நன்மைகள் பற்றி இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் பார்ப்போம்.
சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்துக்கொள்ளும் தன்மை பன்னீருக்கு உண்டு. இதில் உள்ள அக்ஸிஜனேற்றப்பொருட்கள் சருமத்தை வலுப்படுத்தக்கூடியவை. இதனால் சோர்வான தசைகள் புத்துணர்வு பெறுவதோடு புதுப்பொலிவையும் பெறுகிறது.
அதேபோல, கண்களில் ஏற்படக்கூடிய கருவளையம், மற்றும் வெப்பத்தால் ஏற்படக்கூடிய சரும அழற்சி, சரும எரிச்சல், முகப்பருக்கள், முகத்தழும்புகள் மற்றும் சருமத்தில் ஏற்படும் கடினத்தன்மைகள் போன்ற பிரச்சனைகளுக்கும் பன்னீர் தீர்வைத்தருகிறது.
மேலும், சூரியக்கதிர்களால் ஏற்படக்கூடிய சரும பிரச்சனைகள் நீங்க, பன்னீருடன் சிறிதளவு கற்றாழை ஜெல்லையும் சேர்த்து கலந்து சருமத்தில் தேய்த்து இருபது நிமிடங்களின் பின்னர் சுத்தமான நீரினால் கழுவிவர முகம் பொலிவு பெறும்.
அதேபோல, நம் உதடுகள் ரோஜாப்பூ போன்று மென்மையாகவும், சிவப்பாகவும் காட்சி தர பன்னீரை உதட்டில் பூசி மென்மையாக மசாஜ் செய்துவர உதடுகள் மீதுள்ள கருமை நிறம் நீங்கி அழகுடனும் சிவப்பாகவும் காணப்படும்.
அதேபோல, பன்னீருடன் சந்தனத்தையும், தேனையும் ஒன்றாகக் கலந்து அதனை முகத்தில் பூசிவர சருமச் சுருக்கங்கள் நீங்கி, இளமைத் தோற்றத்துடன் காணப்படுவீர்கள்.