அதிக மருத்துவ குணங்களைக் கொண்ட நெல்லிக்காய், எமது சரும அழகை மெருகேற்றிக் கொள்ளவும் துணையாக உள்ளது. நெல்லிக்காயைக் கொண்டு எமது சருமத்தை எவ்வாறு அழகுபடுத்திக் கொள்ளலாம் என்பதைப் பற்றி இன்றைய குறிப்பில் பார்ப்போம்.
நெல்லிக்காயை அதிகமாக உண்பதால் எமது இரத்தம் சுத்தமாக்கப்பட்டு சருமம் இளமையாகக் காணப்படும்.
நெல்லிக்காயை ஃபேஸ் மாஸ்க்காகவும், ஸ்கரப்பாகவும் பயன்படுத்துவதன் மூலமாக, முகத்தில் காணப்படும் முகப்பரு, கருமை, தழும்பு என்பவற்றை நீக்கிக்கொள்ள முடியும்.
இரண்டு தேக்கரண்டி அளவில் நெல்லிக்காயின் சாற்றையும், பப்பாளிப்பழத்தின் சாற்றினையும் கலந்து முகத்தில் பூசி, நன்கு ஊற வைத்து 20 நிமிடங்களின் பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி வர, சருமம் பொலிவாகக் காணப்படும்.
நெல்லிக்காயை தூளாக அரைத்து, அதனுடன் சிறிதளவு தயிர் மற்றும் சுத்தமான தேன் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் பூசி, நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுவதன் மூலமாக பளபளப்பான முகத்தைப் பெற முடியும்.
அரைத்த நெல்லிக்காய் தூள், சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் 2 தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை காயவைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மிதமான வெந்நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலமாக சருமத்தைப் பிரகாசமாக வைத்துக்கொள்ள முடியும்.
நெல்லிக்காயை அரைத்து அதனுடன், சிறிதளவு சர்க்கரை மற்றும் பன்னீர் சேர்த்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை முகத்தில் பூசி மசாஜ் செய்து, பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் சருமம் மென்மையாகக் காணப்படும்.
சிறிதளவில் நெல்லிக்காய்த் தூளுடன், அரைத் தேக்கரண்டி அளவு எலுமிச்சம் பழச்சாறு மற்றும் சர்க்கரை ஆகியவற்றைக் கலந்து முகத்தில் பூசி பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இது எமது சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை நீக்கி, பொலிவான சருமத்தைத் தரும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி எமது சரும அழகை மேம்படுத்திடுவோம்.