இலகுவான முறையில் எமது சரும அழகை அதிகரித்துக் கொள்வதற்கு அன்னாசிப்பழம் உதவுகின்றது. அன்னாசிப்பழத்தில் விட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகமாக உள்ளமையினால், இவை எமது சருமத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே அன்னாசிப்பழத்தைப் பயன்படுத்தி எமது சரும அழகை எவ்வாறு மெருகேற்றிடலாம் என்பதைப் பற்றி, இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்து கொள்வோம்.
சருமத்தில் அதிக பருக்களும், தழும்புகளும் காணப்படின், அன்னாசிப்பழத்தின் சாற்றை டோனராகப் பயன்படுத்தலாம். இது சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை நீக்கி, சருமத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ளும்.
சிறிதளவு அன்னாசிப்பழத்தின் சாற்றை முகத்தில் பூசி 15 நிமிடங்களின் பின்னர் குளிர்மையான நீரால் கழுவி வர, சருமம் பளபளப்பாகக் காணப்படுவதுடன், பருக்களும் இலகுவாக மறையும்.
அத்துடன் அதிக வெப்ப காலங்களில் சருமம் மிகுந்த சோர்வாகவும், வறட்சியாகவும் காணப்படும். இதற்கு அன்னாசிப்பழத்தின் சாற்றை எடுத்து, முகத்தில் பூசுவதனால் சருமம் மென்மையாகக் காணப்படுவதுடன், கருவளையமும் இலகுவாக மறைந்து, முகம் பிரகாசமாகக் காணப்படும்.
சிறிதளவு அன்னாசிப்பழத்தின் சாற்றை எடுத்து பட்டுத்துணியால் நனைத்து எமது கண்களின் மேல் பகுதியில் 20 நிமிடங்கள் வரை வைத்துக்கொள்ளவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி வர, சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும். அத்துடன், சருமத்தில் காணப்படும் சுருக்கங்கள் அனைத்தும் மறைந்து சருமம் இளமையாகக் காணப்படும்.
அன்னாசிப்பழத்தின் சாற்றுடன் சிறிதளவு தேனையும் கலந்து முகத்தில் பூசி, நன்கு மசாஜ் செய்த பின்னர் மிதமான வெந்நீரால் கழுவி வர, சருமம் வசீகரமாகக் காணப்படும். அத்துடன் முகத்திலுள்ள தழும்புகளும் இலகுவாக மறையும்.
எனவே மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி எமது சரும அழகை மேம்படுத்திக் கொள்வோம்.