பார்-டெயில் காட்விட் (Bar-tailed Godwit) என்ற இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை உணவு, ஓய்வு என்று எங்கும் நிற்காமல் தொடர்ச்சியாக 11 நாட்கள் பறந்து சாதனை படைத்துள்ளது.
வட அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள அலாஸ்காவில் பார்-டெயில் காட்விட் (Bar-tailed Godwit) என்ற பறவை இனம் பனி அதிகமாகும் போது அது அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்திற்கு இடம் பெயர்வது வழக்கம்.
மற்ற பறவை இனங்களை போல் இவை அடிக்கடி ஓய்வெடுக்காது. எப்போதாவது தரையிறங்கும். ஆனால் இது தண்ணீரில் தரை இறங்காது. இதற்கு முக்கிய காரணம் அவற்றின் உடல் அமைப்பு தண்ணீரில் மிதக்க ஏற்றது அல்ல என்பதுடன் அவை தவறுதலாக கூட தண்ணீரில் விழுந்தாலும் அவை இறந்துவிடும் பண்பினைக்கொண்டவை. இதனாலேயே இந்த பறவை நீண்ட தூரம் நிற்காமல் பறக்கும்.
இதனடிப்படையில் கடந்த ஒக்டோபர் 13ம் திகதி தொடங்கிய அதன் பயணம் 11 நாட்கள் மற்றும் ஒரு மணி நேரம் வரை தொடர்ச்சியாக பறந்ததுடன் உணவு அல்லது ஓய்வுக்காக நிற்காமல் அலாஸ்காவிலிருந்து அவுஸ்திரேலிய மாநிலமான டாஸ்மேனியாவிற்கு 13,560 கிலோமீட்டர்கள் பறந்து சாதனை படைத்துள்ளது.
இடப்பெயர்ச்சி பறவைகள் பறக்கும் தூரம் காலம் ஆகியவற்றை செயற்கைக்கோள் குறியீடுகளை வைத்து பறவை ஆர்வலர்கள் கண்காணிப்பது வழக்கமான ஒரு விடயமாகும். அப்படி தொடர்ச்சியாக நீண்ட தூரம் பறக்கும் பறவைகளை கண்டுபிடித்து அதை பதிவு செய்து கொள்வார்கள். இதனடிப்படையிலேயே இந்த பறவையின் சாதனையும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.