இயற்கையான முறையில் எமது சரும அழகை அதிகரித்துக் கொள்வதற்கு அரிசி மாவு சிறந்ததாகும். அரிசி மாவைக் கொண்டு எளிமையான முறையில் எமது சரும அழகை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்து கொள்வோம்.
சருமத்தில் காணப்படும் சுருக்கங்களை நீக்கி இளமையான சருமத்தைப் பெறுவதற்கு அரிசி மாவு உதவுகின்றது. அரிசி மாவை பசுப்பாலுடன் கலந்து, முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் மிதமான வெந்நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இது சருமத்தை இளமையாக வைத்துக் கொள்கின்றது.
அரிசி மாவுடன் சிறிதளவு சர்க்கரையையும் சேர்த்து முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இது முகத்தில் காணப்படும் அழுக்குகளை நீக்கி, பொலிவான சரும அழகைத் தர வல்லது.
பெண்கள் இரவு நேரங்களில், தூங்குவதற்கு முன்னர் அரிசி மாவை முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் முகத்தைக் கழுவுவதால், சருமத்தில் காணப்படும் தழும்புகளும், பருக்களும் இலகுவாக மறையும். ஒப்பனைக்குப் பின்னர் பெண்கள் தமது முகத்தைக் கழுவும் போது அரிசி மாவைக் கொண்டு கழுவுவதால், சருமம் பாதுகாக்கப்படும்.
2 தேக்கரண்டி அரிசி மாவுடன், 1 தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி, நன்கு மசாஜ் செய்த பின்னர் முகத்தை மிதமான வெந்நீரால் கழுவலாம். இது சருமத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்ளும்.
ஒரு தேக்கரண்டி அரிசி மாவுடன் சிறிதளவு வெள்ளரிக்காயின் சாற்றையும் கலந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் கழுவி வர, சருமம் வெண்மையாகக் காணப்படும்.
எனவே மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி எமது சரும அழகை மேம்படுத்திக் கொள்வோம்.