சருமம் பிரகாசமாக இருப்பதற்கு இலகுவான பல வழிமுறைகளை நாம் பின்பற்றலாம். தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து வீட்டில் இருந்தவாறே எமது சருமத்தை எவ்வாறு பிரகாசமாக வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி, இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்துகொள்வோம்.
சிறிதளவு மஞ்சளுடன், வெள்ளரிக்காயையும் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து, அதனை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி வர, சருமம் பிரகாசமாகக் காணப்படுவதுடன், மென்மையாகவும் இருக்கும்.
கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு வெள்ளரிக்காயின் சாற்றையும் கலந்து, தினமும் இரவில் தூங்குவதற்கு முன்னர் முகத்தில் பூசி நன்கு காயவைத்துக்கொள்ளவும். இந்த பேஸ்ட் நன்கு காய்ந்த பின்னர், மிதமான வெந்நீரால் முகத்தைக் கழுவலாம். இது எமது சருமத்தை இளமையாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றது.
ரோஜா இதழ்களுடன் சிறிதளவு சந்தனம், பன்னீர் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து முகத்தில் பூசி, நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் முகத்தைக் கழுவலாம். இது எமது சருமத்தில் காணப்படும் கருமையை நீக்கி, சருமத்தைப் பிரகாசமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
பசுப்பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம் ஆகியவற்றை பேஸ்ட் போன்ற பதத்திற்கு கலந்து முகத்தில் பூசி, நன்கு மசாஜ் செய்த பின்னர் மிதமான வெந்நீரால் முகத்தைக் கழுவி வர, சருமம் பளபளப்பாகக் காணப்படும்.
சிறிதளவு வேப்பிலையுடன், வெள்ளரிக்காயின் சாற்றையும் கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்த கலவையுடன் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், இரண்டு தேக்கரண்டி ஓட்ஸ் தூள், தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றையும் சேர்த்து பேஸ்ட் போல கலந்து முகத்தில் பூசி, நன்கு மசாஜ் செய்த பின்னர் மிதமான வெந்நீரால் கழுவி வர, சருமம் பிரகாசமாகக் காணப்படும்.
எனவே மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி எமது சரும அழகை மேம்படுத்திக் கொள்வோம்.