பெண்கள் தமது சருமத்தை இயற்கையான முறையில் எவ்வாறு பிரகாசமாக வைத்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றி இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்து கொள்வோம்.
எமது சருமத்தைப் பிரகாசமாக வைத்துக்கொள்வதற்கு எலுமிச்சம் பழச்சாறு பெரிதும் உதவுகின்றது. 2 தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாற்றுடன், சிறிதளவு கடலைமாவு, தயிர் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்த பின்னர், மிதமான வெந்நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இது எமது சருமத்தைப் பிரகாசமாகவும், மென்மையாகவும் வைத்துக்கொள்ளும்.
2 தேக்கரண்டி கடலைமாவுடன் சிறிதளவு மஞ்சள் தூளையும், தண்ணீரையும் கலந்து முகத்தில் பூசி அரை மணிநேரம் வரை காய வைத்துக்கொள்ளுங்கள். இந்த பேஸ்ட் நன்கு காய்ந்த பின்னர் மிதமான வெந்நீரால் முகத்தைக் கழுவி வர, சருமம் பிரகாசமாகக் காணப்படும்.
எப்போதும் முகத்திற்கு ஒப்பனை (Makeup) செய்யும் போது, தரமான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். அத்துடன் ஒப்பனை செய்த பின்னர், குளிர்மையான நீரால் முகத்தை சுத்தமாகக் கழுவிய பின்னர், கற்றாழை ஜெல்லை முகத்தில் பூசி நன்கு காய்ந்த பின்னர் கழுவி வர, முகத்தில் காணப்படும் அழுக்குகள் இலகுவாக நீங்கி முகம் பிரகாசமாகக் காணப்படும்.
எனவே மேற்சொன்ன இலகுவான வழிமுறைகளைப் பின்பற்றி எமது சரும அழகைப் பாதுகாப்போம்.