கோதுமை வெல்லத் தோசை சுவையானது மட்டுமல்லாமல் சத்தானதும் கூட. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவாகும்.
தேவையான பொருட்கள் - கோதுமை மா - 2 கப், வெல்லம் (பொடித்தது) - 1 கப், பச்சை அரிசி மா - கால் கப், தேங்காய் (துருவியது) - கால் மூடி, நன்கு பழுத்த வாழைப்பழம் - 2, ஏலக்காய் - 4, நெய் - தேவையான அளவு.
செய்முறை - முதலில் வாழைப்பழத்தை நன்றாக மசித்துகொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பச்சை அரிசி மா, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் போன்றவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் வெல்லத்தை 1 கரண்டி நீர் சேர்த்து சூடு செய்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
அதன்பின் கோதுமை மா, மசித்த வாழைப்பழம், வெல்லம் நீர், தேங்காய் கலந்த பச்சை அரிசி மா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தோசை மா பக்குவத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றி நெய் ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான சத்துமிக்க கோதுமை வெல்லத் தோசை தயார்.