உலக அளவில் அழிவின் விளிம்பில் இருக்கும் முக்கிய உயிரினமாக கருதப்படுவது காண்டாமிருகங்களாகும். அதிலும் இந்த ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் வேகமாக அழிந்துவருகின்றன.
ஏழாவது யுனெஸ்கோ உலக பாரம்பரிய ஸ்தலமாக அங்கீகாரம் பெற்ற அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகமானது, உலக சுற்றுலா பயணிகளின் கேந்திர மையமாக வேகமாக மாறிவருகிறது.
இந்த பூங்கா 2,613க்கும் மேற்பட்ட ஒற்றைக்கொம்பு இந்திய காண்டாமிருகங்களின் இருப்பிடம் மட்டுமல்ல, இது ரோயல் பெங்கால் புலிகள், ஆசிய யானைகள், காட்டு எருமைகள் என பல விலங்கினங்கள் மற்றும் 125க்கும் அதிகமான பறவையினங்களின் வாழ்விடமுமாக உள்ளது.
இந்த அரியவகை ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் அதன் கொம்புகளுக்காக அதிகம் வேட்டையாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அழிந்துவரும் காண்டாமிருகங்கள் மீதான வேட்டையாடலை 2022ஆம் ஆண்டில் முற்றாக இல்லாதொழித்துள்ளதாகவும், இது சுமார் 45 ஆண்டுகளில் முதல் முறையாக நடந்திருப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
காசிரங்கா தேசிய பூங்காவுக்கு 2021ஆம் ஆண்டில் 1,719 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 2.75 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
2022 ஒக்டோபர் முதல் 2023 மே வரை வெளிநாட்டுப் பயணிகள் உட்பட சுமார் 3.50 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தரக்கூடும் என்றும் மூத்த இந்திய வன பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதிகமாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்தே சுற்றுலா பயணிகள் வருகின்ற அதேவேளை, சமீப காலமாக மற்ற நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வரத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அதிக சுற்றுலாப்பயணிகள் வருகைதருமிடமாக இந்த பூங்கா மாறுவதற்கு முக்கிய காரணம் இந்த காண்டாமிருகங்களேயாகும்.