2010 ஆம் ஆண்டு வெளியான பையா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. பையா 2ம் பாகத்தில் கார்த்தி நடிக்கவில்லை எனவும் அவருக்கு பதிலாக ஆர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர் என்றும் இணையத்தில் செய்திகள் பரவி வந்தன.இதில் கதாநாயகியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் ஆகியோரின் மகளான ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.
ஏற்கனவே தமிழ் படத்தில் நடிக்க நடிகை ஜான்வி கபூர் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் பையா 2-ம் பாகத்தில் கண்டிப்பாக நடிப்பார் என கூறப்பட்டது.ஆனால் தற்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக, "ஜான்வி கபூர் தமிழில் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்" என நடிகை ஜான்வி கபூரின் தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.