துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 7,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை துருக்கியில் 5,894 பேரும் சிரியாவில் குறைந்தது 2032 பேரும் நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துருக்கியில் நிலவும் கடும் பனிப்பொழிவு மீட்புப்பணிகளுக்குத் மிகப்பெரிய தடையாக உள்ளது.
துருக்கியில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில், மிக மோசமான நிலநடுக்கம் இது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 2 நிமிடங்கள் நீடித்ததாக, அனர்த்தத்தில் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வட மேற்கு சிரியாவில் நிலநடுக்கத்திற்கு பின் பிறந்த குழந்தையை மீட்புக்குழுவினர் கட்டட இடிபாடுகளிலிருந்து பத்திரமாக மீட்டுள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பின்பு, அக்குழந்தையின் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தையை பெற்றெடுத்த பின்னர் அப்பெண் உயிரிழந்ததாக உறவினர் ஒருவர் தெரிவித்தார். அவருடைய தந்தை, உடன்பிறந்த 4 பேர் உள்ளிட்டோரும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தனர்.
இட்லிப் மாகாணத்தில் துருக்கி எல்லைக்கு அருகில் உள்ள நகரமான ஜின்டாய்ரிஸில் கட்டட இடிபாடுகளிலிருந்து அக்குழந்தை மீட்கப்பட்டது.
அக்குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துருக்கி மற்றும் சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.