இவர் நான்கு வயதில் துணைவன் என்ற பக்தி திரைப்படத்தில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பணியாற்றினார். தனது யதார்த்தமான நடிப்பால் இரசிகர்களை கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி நடனத்திற்கும் பெயர் போனவர். இவருடைய நடிப்பு மற்றும் திறமையினால் பொலிவுட்டின் லேடி அமிதாப் என்ற பெயரையும் பெற்றார்.
இதற்கிடையே கடந்த 1996 ஆம் ஆண்டு போனி கபூரை திருமணம் செய்துக்கொண்டார். இந்திய சினிமாவின் பிரபல நடிகையான ஸ்ரீதேவி, கடந்த 2018 ஆம் ஆண்டு உயிரிழந்தார். ஸ்ரீதேவி டுபாயில் உள்ள தனது ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு விரைவில் புத்தகமாக வெளியாகவுள்ளது. இந்த புத்தகம் 'ஸ்ரீதேவி தி லைப் ஆஃப் எ லெஜண்ட்' (sri devi - The life of a legend) என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இந்த புத்தகத்தை தீரஜ் குமார் எழுதியிருக்கிறார் என நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.