ஆட்டுக்கால் கொண்டு செய்யப்படும் உணவு வகைகளில் சுவை மிக்க ஒன்றுதான் ஆட்டுக்கால் பாயா. சுவையான ஆட்டுகால் பாயா தயாரிக்கும் முறை பற்றி இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் பார்ப்போம். இதற்கு தேவையானவை ..
ஆட்டுக்கால் – நான்கு
வெங்காயம் – நான்கு
தக்காளி – மூன்று
இஞ்சி பூண்டு விழுது – நான்கு மேசைக்கரண்டி
கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் – ஐந்து
தேங்காய் பால் – ஒரு கப்
தேங்காய் துருவல் – கால் கப்
முந்திரிப்பருப்பு – பத்து
கசகசா – ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – இரண்டு மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தாளிக்கத் தேவையானவை,
சோம்பு – ஒரு மேசைக்கரண்டி
பிரிஞ்சி இலை – இரண்டு
பட்டை – நான்கு துண்டு
கராம்பு – நான்கு
ஏலக்காய் – நான்கு
எண்ணெய் – தேவையான அளவு
முதலில் தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு , கசகசா, இரண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வெங்காயம் மற்றும் ஒரு தக்காளிப்பழம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து வெட்டி வைத்துள்ள வெங்காயம், தக்காளிப்பழம் , பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.
பின்னர் மீதமுள்ள வெங்காயம், தக்காளிப்பழம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பின்னர் அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நன்கு கொதித்த பின்னர் தாளிக்கத் தேவையான மேற்கூறிய பொருட்களை தாளித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு தாளித்து முடித்ததும் வெங்காயம், எஞ்சிய இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது நன்றாக வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து நன்கு மசியும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய், மற்றும் முந்திரிப்பருப்புக் கலவையை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்க வேண்டும். அவை நன்கு வதங்கியதும் வேக வைத்துள்ள ஆட்டுக்கால் கலவை மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
அவை நன்கு கொதிக்கும் போது தேவையான அளவு மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அவ்வாறு கொதித்ததும் தேங்காய் பால் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து இறக்க வேண்டும்.
இப்போது சுவையான ஆட்டுக்கால் பாயா தயாராகிவிடும். இதனுடன் சூடான சப்பாத்தி, நாண், ஆப்பம், தோசை, இடியாப்பம் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.