டுபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவின் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
டுபாய் ஓபன் சர்வதேச ஆண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் ஆந்த்ரே ரூப்லெவுடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ரூப்லெவை வீழ்த்தி, சம்பியன் பட்டம் வென்று அசத்தினார். எதிர்த்தாடிய வீரரால் மெத்வதேவ்வின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த தொடரில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மெத்வதேவ், சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜோகோவிச்சை அரையிறுதியில் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெத்வதேவ் இந்த ஆண்டில் ரோட்டர்டாம், டோஹா மற்றும் டுபாய் என தொடர்ச்சியாக 3 தொடர்களில் சம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
ஆனால் அவரால் அமெரிக்க , அவுஸ்திரேலிய , பிரென்ச், விம்பிள்டன் ஆகிய ஓபன் தொடர்களை வெல்ல முடியாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.