பெண்களுக்கான 200 மீற்றர் பின்னோக்கிய (backstroke) நீச்சல் போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனையான கெய்லீ மெக்கோவ்ன் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்று ஆரம்பமான நியூ சௌத் வேல்ஸ் மாநில பகிரங்க நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளில் 2 நிமிடங்கள் 03.14 விநாடிகளில் நீந்தி புதிய உலக சாதனையை இவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக அமெரிக்காவின் ரேகான் ஸ்மித் கடந்த 2019ம் ஆண்டு உலக நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளில் 2 நிமிடம் 03.35 விநாடிகளில் நீந்தியமையே இதுவரை உலக சாதனையாக இருந்தது.
21 வயதான கெய்லீ மெக்கோவ்ன் இதற்கு முன்னரும் 100 மீற்றர் பின்னோக்கிய நீச்சல் உலக சாதனை படைத்துள்ளதுடன் கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.