தன்னுடைய மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்ற ஆத்திரத்தில் தனது மாமியாரின் மூக்கை மருமகன் அறுத்த பரபரப்பான சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் வசித்து வந்த குறித்த தம்பதியினருக்கு இடையில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தனது மனைவியை கடுமையான முறையில் துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான அவரின் மனைவி காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இவர்கள் இருவருக்குமிடையிலான பிணக்கை தீர்த்து வைக்க பெண்ணின் பெற்றோர் முயற்சித்த போதிலும் அது சாத்தியமாகவில்லை. இதனால் கோபமுற்ற கணவன் தனது மாமியாரின் மூக்கை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்து வரும் நிலையில் தனது மாமியாரே தன் மனைவியை பிரச்சினைகளுக்கு தூண்டி விடுவதாகவும் இதனால் ஆத்திரமுற்றே தாம் அவரின் மூக்கை அறுத்ததாகவும் அவர் கூறியதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.