மட்டன் உணவுகள் ஆரோக்கியம் நிறைந்தவையாகும். மட்டனை வைத்து விதவிதமாக உணவுகள் சமைக்கப்படுகிறது.
ஆகவே மட்டன் மூளையை வைத்து செய்யப்படும் உணவுகள் ருசி நிறைந்தவையாகும்.
அந்தவகையில் இன்று மட்டன் மூளை மிளகு வறுவல் எவ்வாறு செய்வதை என்பதை பார்ப்போம். இதனை தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் - மட்டன் மூளை - 5 சின்ன வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 1 பச்சை மிளகாய் - 3 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி , தனியா தூள் - 2 தேக்கரண்டி சீரக தூள் - 1 தேக்கரண்டி மிளகு தூள் - 2 தேக்கரண்டி உப்பு -தேவையான அளவு கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை: மட்டன் மூளையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தண்ணீர் சூடானதும் அதில் மட்டன் மூளையை போட்டு அதனுடன் 1/2 தேக்கரண்டி , சிறிது உப்பு போட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
பின்பு தண்ணீரில் இருந்து எடுத்து, அதில் உள்ள நரம்புகளை நீக்கி, பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். தக்காளி குழைய வதங்கி எண்ணெய் பிரிந்தது வரும் போது அதில் நறுக்கிய மட்டன் மூளையை சேர்த்து கலந்து, அதனுடன் மிளகு தூள் சேர்த்து வதக்கவும். பின்பு கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும். தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்ததும் அதில் சிறிது அளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால் மட்டன் மூளை மிளகு மசாலா தயார்.