இயற்கையின் பெரிய அரண்களாகவும் நாம் சுவாசிக்கும் காற்றை சுத்திகரிக்கும் ஆலைகளாகவும் மரங்கள் பிரதானமாக தொழிற்பட்டு வருகின்றன.
இருப்பினும் மனிதன் தனது தேவைக்காக தினமும் பல்லாயிரக்கணக்கான மரங்களை வெட்டுகின்றான். இருப்பினும் தவிர்க்க முடியாத காரணத்திற்காக ஒரு மரத்தை வெட்ட நேர்ந்தால் அதற்குப் பதிலாக பல மரக்கன்றுகளை நாம் நட்டு பாதுகாக்க வேண்டும். அப்போது தான் இயற்கை அழியாமல் இருக்கும்.
ஆனால் அதை எம்மில் அதிகமானோர் பின்பற்றுவதில்லை என்றும் இது தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஓவியர் ஒருவர் மரங்களில் ஓவியங்கள் வரைந்து அசத்தி வருகிறார்.
மரங்கள் வெட்டப்படாமல் தடுப்பதற்காக இந்த யுக்தியை அவர் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ள அவர் கிளைகளில் அழகிய வண்ணங்களைக் கொண்டு கடவுள்களின் உருவங்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்து வருகிறார்.
இவர் வரையும் ஓவியங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் இவரின் முயற்சியை பலரும் பராட்டி வருகிறார்கள் இவர் வரைந்த ஓவியங்கள் முன்னால் கூட்டம் கூட்டமாக மக்கள் செல்ஃபி புகைப்படங்களையும் எடுத்துக்கொள்கிறார்கள்.
தன் ஓவியங்கள் மூலம் இயற்கை மீது மக்களுக்கு மரியாதையும் அதை பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணமும் வர வேண்டும் என்பது தனது குறிக்கோள் என்றும் இந்த ஓவியர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.