அண்மையில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி, பிரபல மிமிக்ரி கலைஞர் கோவை குணா ஆகியோர் அடுத்தடுத்து காலமானார்கள்.
இந்நிலையில் பிரபல கிடார் கலைஞர் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் இரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான 'பீமா' திரைப்படத்திற்கு இசையமைத்த ஹரிஸ் ஜெயராஜ், கிடார் கலைஞர் ஸ்டீவ் வாட்சை திரைத்துறையில் அறிமுகம் செய்தார். அதனை தொடர்ந்து கெளதம் மேனனின் 'வாரணம் ஆயிரம்' திரைப்படத்திலும் கிட்டாரிஸ்ட்டாக பணியாற்றினார்.
இவர் தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களான இசைஞானி இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார், இமான், அனிருத் ரவிச்சந்தர் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
ஸ்டீவ் வாட்ஸ் மூளையில் கட்டி காரணமாக கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி ஸ்டீவ் வாட்ஸ் அவருடைய 43 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் இரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.