வீதி விபத்துக்களால் வருடமொன்றுக்கு சுமார் 1.35 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். 50 மில்லியன் மக்கள் காயமடைகின்றனர்.
அதேநேரம் ஒரு நாளைக்கு சுமார் 3700 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழக்கின்றனர். அதிலும் ஆசிய நாடுகளில் விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இந்தியாவில் வருடமொன்றுக்கு 7 இலட்சம் பேர் உயிரிழப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளது. கடந்த 2017 முதல் 2021 வரையில் 21 .59 இலட்சம் விபத்துக்கள் பதிவாகியுள்ளது.
வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செய்யப்படுகின்ற போதிலும் துரதிஷ்டவசமாக விபத்துக்கள் பதிவாகிக்கொண்டுதான் இருக்கின்றது.
இந்நிலையில் இலங்கையிலும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. வீதி கட்டுப்பாடுகளை அதிகரித்து விபத்துக்களை குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதிகமான வீதி விபத்துக்களுக்கு காரணமாக அமைந்திருப்பது மது போதை , தலைக்கவசம் அணியாமை, தூக்கமின்மை , கவனக்குறைவு , அதிக வேகம் , வீதி கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமை, கைப்பேசியை பயன்படுத்திக்கொண்டு வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகிறது.
நல்ல வீதி வசதிகள் இல்லாத வீதியிலும் கூட, வீதி ஒழுங்கு முறைகளை சரியாக பின்பற்றி வாகனம் செலுத்த வேண்டும். அப்படி வாகனம் செலுத்துகின்றவர்கள் பெரும்பாலும் விபத்துகளில் சிக்குவது இல்லை.