வரலாற்று புகழ்பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார்.முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்துத் தயாரித்திருந்த இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி,கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், லால் உட்பட பலர் நடித்துள்ளனர்.இப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதன் இரண்டாம் பாகம் கடந்த,ஏப்ரல் மாதம் 28-ம் திகதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இப்படம் உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் இந்திய மதிப்பில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில்,பொன்னியின் செல்வன் பாகம் - 2 வெற்றிக்கு நடிகர் விக்ரம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல.மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல்.என்னை மகிழ்வித்த உங்களுடைய அளவில்லா அன்புக்கும் ஆதரவுக்கும் பல கோடி நன்றிகள்.வீர வேல்! வெற்றி வேல்! - ஆதித்த கரிகாலன்” என்று கூறியுள்ளார்.
இந்த டுவிட்டர் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.