எலுமிச்சம் பழத்தோலைக் கொண்டு எமது அழகை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதைப் பற்றி இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்து கொள்வோம்.
எலுமிச்சம் பழத்தில் விட்டமின் C, தாதுக்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், கல்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை எமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது சரும அழகை மெருகேற்றிக் கொள்வதற்கும் துணை புரிகின்றது.
எலுமிச்சம் பழத்தோலை குளிக்கும் தண்ணீரில் சேர்த்து 30 நிமிடங்கள் வரை ஊற வைத்த பின்னர் அந்த நீரால் குளிக்கலாம். வாரத்தில் இருமுறை இவ்வாறு செய்துவர, சருமத்தில் காணப்படும் அழுக்குகள் அனைத்தும் நீங்கி சருமம் பொலிவாகக் காணப்படும்.
கருமையான சருமத்தைக் கொண்டவர்கள் தேங்காய் எண்ணெயைப் பூசி, எலுமிச்சம் பழத்தோலால் மசாஜ் செய்த பின்னர் சுத்தமான நீரால் கழுவி வர சருமம் மென்மையாகக் காணப்படும்.
எலுமிச்சம் பழத்தோலையும், புதினா இலைகளையும் அரைத்து சருமத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்த பின்னர் மிதமான வெந்நீரால் சுத்தமாகக் கழுவ வேண்டும். இது எமது சருமத்திலுள்ள தழும்புகளை நீங்கி சருமத்தைப் பாதுகாக்கின்றது.
எலுமிச்சம் பழத்தோலை தூளாக அரைத்து அதனுடன் 2 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி பன்னீர் ஆகியவற்றைக் கலந்து சருமத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் சுத்தமாகக் கழுவி வர, சருமம் பொலிவாக இருக்கும்.
எலுமிச்சம் பழத்தோலையும், கடலைமாவையும் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து சருமத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்த பின்னர் சுத்தமாகக் கழுவ வேண்டும். இது சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை நீக்கி சருமத்தைப் பாதுகாத்துக் கொள்கின்றது.
எனவே மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி எமது சரும அழகைப் பாதுகாத்திடுவோம்.