தமிழில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேலாக குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள மனோபாலா,கல்லீரல் பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் தனது 69 ஆவது வயதில் இன்று உயிரிழந்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து,1982ல் ஆகாய கங்கை என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மனோபாலா,ஆகாய கங்கை,பிள்ளை நிலா,ஊர்க்காவலன்,என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உள்பட 40 படங்களை இயக்கியுள்ளதோடு,16 தொலைக்காட்சி தொடர்களை இயக்கியும், 200க்கும் மேற்பட்ட படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்துமுள்ளார்.
பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் அவரது கதாபாத்திரம் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது.வடிவேலு,விவேக்,சந்தானம் ஆகியோருடன் அவர் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது என்று சொல்லலாம்.
விவேக்குடன் ஒரு திரைப்படத்தில் மனோபாலா பேசிய ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’ என்ற வசனம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது.தன் நகைச்சுவை காட்சிகளால் நம் கவலை எல்லாம் மறந்து சிரிக்கும்படி செய்த மனோபாலாவின் திடீர் மறைவு,திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் மனோபாலாவின் மறைவிற்கு திரைத்துறையினரும்,அவரின் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த இயக்குநர்,நடிகர் மனோபாலாவிற்கு சூரியனின் அஞ்சலிகளும்.