ஐ.பி.எல் வரலாற்றில் 7,000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 233 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி மொத்தம் 7,036 ஓட்டங்களை கடந்துள்ளார்.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. நாணய வென்ற பெங்களூர் அணி முதலில் துடுப்பாட்ட முடிவு செய்தது.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரை சதமடித்து 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் 7,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
233 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 46 அரைசதங்களுடன் மொத்தம் 7,036 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வரிசையில் 6,536 ஓட்டங்களுடன் ஷிகர் தவான் 2-ம் இடத்திலும், 6,189 ஓட்டங்களுடன் டேவிட் வோர்னர் 3-வது இடத்திலும், 6,063 ஓட்டங்களுடன் ரோகித் ஷர்மா 4-வது இடத்திலும், 5,528 ஓட்டங்களுடன் சுரேஷ் ரெய்னா 5-வது இடத்திலும் உள்ளனர்.
இதே வேகத்தில் கோலி துடுப்பெடுத்தாடினால் 8 ஆயிரம் ஓட்டங்களையும் வேகமாக கடக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.