பன்னீரைப் பயன்படுத்தி எமது சரும அழகை அதிகரித்துக் கொள்ளும் வழிமுறைகளைப் பற்றி
இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் பார்ப்போம்.
சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்துக்கொள்ளும் தன்மை பன்னீருக்கு உண்டு. இது எமது சருமத்திற்கு பொலிவைத் தருகின்றது.
அதேபோல எமது கண்களில் ஏற்படக்கூடிய கருவளையம், மற்றும் வெப்பத்தால் ஏற்படக்கூடிய சரும வறட்சி, சரும எரிச்சல், முகப்பருக்கள், முகத்தழும்புகள் மற்றும் சருமத்தில் ஏற்படும் கடினத்தன்மைகள் போன்ற பல பிரச்சனைகளுக்கும் பன்னீர் சிறந்த தீர்வைத்தருகிறது.
சூரியக்கதிர்களால் ஏற்படக்கூடிய சரும பிரச்சனைகள் நீங்க, பன்னீருடன் சிறிதளவு கற்றாழை ஜெல்லை சேர்த்து சருமத்தில் பூசி இருபது நிமிடங்களின் பின்னர் சுத்தமான நீரினால் கழுவிவர முகம் பொலிவு பெறும்.
பன்னீருடன் சிறிதளவு வெந்தயத் தூளையும் கலந்து தலை முடியின் வேர்ப்பகுதியில் பூசி மசாஜ் செய்து அரை மணி நேரம் வரை அதனை ஊறவிட்டு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவிவர பொடுகுத்தொல்லை நீங்கி கூந்தல் பாதுகாக்கப்படும்.
அதேபோல பன்னீருடன் சிறிதளவு சந்தனத்தையும், தேனையும் ஒன்றாகக் கலந்து அதனை முகத்தில் பூசிவர சருமச் சுருக்கங்கள் நீங்கி, இளமைத் தோற்றத்துடன் காணப்படுவீர்கள்.